தவெகவுக்கு செல்கிறாரா சி.வி. சண்முகம்.. அடித்து சொன்ன ஆதரவாளர்: இபிஎஸ் மீது கடும் தாக்கு – supporter confirms cv shanmugam will not leave the aiadmk

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்ச்சியாக மோதல் போக்கினை கடைப்பிடித்து கொண்டிருக்கிறார் சி.வி. சண்முகம் . இவர் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த விஷயத்தில் தொடர்ந்து சஸ்பென்ஸ் காத்து வருகிறார். இதனால் அவருடைய அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்நிலையில் சி.வி. சண்முகம் ஆதரவாளர் அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு குழுவினர் போர்க்கொடி தூக்கினார்கள். இதில் முக்கிய அங்கம் வகித்தது சி.வி. சண்முகம். அதிமுகவை சார்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் இபிஎஸ்ஸிடம் மன்னிப்பு கடிதம் வழங்கி மீண்டும் கட்சியில் இணைந்தாலும், சி.வி. சண்முகம் மன்னிப்பு கடிதம் வழங்க மறுத்து விட்டார். அதோடு எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார்.

இதனால் சி.வி. சண்முகம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என அரசியல் வட்டாரத்தில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தது. ஆனாலும் அவர் தொடர்ச்சியாக இது சம்பந்தமாக மௌனம் காத்து கொண்டிருக்கிறார். அதோடு தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சி.வி. சண்முகம் அதிமுகவில் இருந்து விலக மாட்டார் என அவருடைய ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

அதாவது, சி.வி. சண்முகம் ஆதரவாளர் சுரேஷ் பாபு என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சி.வி. சண்முகம் கட்சியே மாற மாட்டார். அதிமுகவில் தான் இருப்பார். அவர் ஒன்றும் பலக்கட்சிக்கு செல்பவர் கிடையாது. விழுப்புரம் மாவட்டத்தில் 15 மாவட்ட செயலாளர்கள் பார்க்க வேண்டிய வேலையை, அவருடைய அப்பா ஒரேயொருவர் பார்த்தார். அவுங்கெல்லாம் கட்சி மாற மாட்டார்கள் என உறுதியாக சொன்னார். அதோடு தவெக நிலைப்பாடு இல்லையா என்று கேட்கப்பட்டதற்கு, கிடையாது எனவும் அழுத்தம் திருத்தமாக கூறினார்.

அதோடு கண்டிப்பாக தலைமையை மாற்ற வேண்டும். இதனை நான் மட்டுமா வலியுறுத்துகிறேன். மொத்த தமிழ்நாடும் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் ஒற்றைத் தலைமை வேண்டுமென 28 பேர் இவருக்கு தூணாக இருந்தனர். அவர்களை காலால் எட்டி உதைத்து விட்டார். இவர் என்னமோ யாருக்கும் பவர் இல்லையென நினைத்து கொண்டிருக்கிறார். எல்லாருக்கும் பவர் உள்ளது. தலைமை மாறனும் எனவும் மீண்டும் வலியுறுத்தி பேசினார்.

மேலும் இபிஎஸ் தவிர யார் வேண்டுமானாலும் தலைமைக்கு வரட்டும் என்ற கருத்தினையும் முன்வைத்தார். தொடர்ந்து பேசிய அவர் மதுரையில் ஒரு கூட்டத்தில், அவரிடமே உன் தலைமை சரியில்லை. மாறனும் சொல்றான். இன்னும் எவ்வளவு இதுபோன்று நடக்க போகிறது பாருங்க. எவ்வளவு பெரிய அசிங்கம் பாருங்க. அதோடு சி.வி. சண்முகத்துக்கு தலைமை மீது எல்லாம் ஆசை இல்லை. அப்படி ஆசைப்பட்டு இருந்தால் ஒற்றைத்தலைமை வேண்டுமென அவர் ஏன் போய் நிற்க போறார்.

எங்களுக்கு அவரை தவிர யாராக இருந்தாலும் தலைமை தாங்கட்டும் என்று அழுத்தம் திருத்தமாக சி.வி. சண்முகம் ஆதரவாளர் சுரேஷ் பாபு வலியுறுத்தி பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு தற்போது பெரியளவில் கவனம் பெற்று வரும் நிலையில், விவாதங்களையும் கிளப்பியுள்ளது. இதற்கிடையில் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக இபிஎஸ் குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Source link