தவெக அரசு 24 மணி நேரமும் ஒரே வேலையாக இதைத்தான் செய்கிறது: கடுமையாக சாடிய உதயநிதி ஸ்டாலின் – udhayanidhi stalin speech after meeting dmk mla markandeyan at palayamkottai prison

திமுக சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் தற்போது பாளையங்கோட்டை சிறையில் உள்ளார். முதல்வர் ஜோசப் விஜய்யை மிரட்டும் விதமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், அவர் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில், 15 நாட்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறையில் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன், சமீபத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி நேரில் சந்தித்தார். அவரை தொடர்ந்து இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சிறைக்கு வருகை தந்தார்.

அங்கு திமுக எம்எல்ஏவை சந்தித்து பேசியதற்கு பின்பாக செய்தியாளர்களிடம் பேசினார் உதயநிதி ஸ்டாலின். அப்போது அவர் கூறியதாவது, எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த அரசை தவறாக பேசி விட்டார் என்று கைது செய்து, மிரட்டுகின்ற பணிகளில் தவெக அரசு ஈடுபட்டது. எங்களுடைய தலைவர் அறிவுறுத்தலின் படி அவரை சந்தித்து பேசினோம். என்னுடன் முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தனர் என தெரிவித்தார்.

மேலும் எம்எல்ஏ மார்க்கண்டேயன் ரொம்ப தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளார் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அரசுடைய ஒரே பணியாக திமுகவை சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வேறென்ன பணிகளை அவர்கள் செய்கிறார்கள். தவெக நிர்வாகிகள் மீது அவர்களுடைய கட்சிக்காரர்களே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சட்டம்ன்றத்தில் இதுக்குறித்து நான் பேசி இருக்கிறேன். ஆனால் அரசு எதற்கும் செவி சாய்க்கவில்லை என விமர்சனம் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

அவுங்க கட்சி நிர்வாகிகள் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்களிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதிலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சோஃபா கொடுத்து வாங்குவதை மட்டுமே இந்த அரசு 24 மணி நேரம் பணியாக செய்கிறது என கடுமையாக விமர்சனங்களை பேசியுள்ளார்.

இதற்கிடையில் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்தித்தது தொடர்பாக பகிர்ந்துள்ள பதிவும் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதில் சர்வாதிகார சோஃபா மாடல் அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பின மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சந்தித்தோம். அவரை முன்பை விடவும் வேகமாக கழகப்பணி மற்றும் மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்தில் இருக்கிறார்.

திமுக மிசா – எமர்ஜன்சியை பார்த்துள்ளது. தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் சோஃபா அரசி கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள். விமர்சனத்திற்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின் போதும் நீதிமன்றத்திடம் இந்த ஆட்சியாளர்கள் குட்டுப்படுகிறார்கள். அதே போல் மக்கள் மன்றத்திலும் அவர்கள் சரிவை சந்திப்பது உறுதி. இவ்வாறு தன்னுடைய பதிவில் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link