திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில் அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு இடம் அளித்துள்ளது. இதனிடையில் சமீப காலமாக தவெக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் தவெக கூட்டணியில் இணைவது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி பேசியுள்ளது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தது பாமக. 18 தொகுதிகளில் இக்கட்சி போட்டியிட்ட நிலையில் தருமபுரி, செஞ்சி, விக்கிரவாண்டி மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய 4 தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றது. இதனிடையில் தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக அக்கட்சி தனித்து இயங்கி வருகிறது. என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிப்பதை போன்று எந்த கருத்தையும் பாமக தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் சமீப காலமாக ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தை பாமக நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியான உள்ளன. இதனால் தவெக கூட்டணியில் அக்கட்சி இணையலாம். அமைச்சரவையில் பங்கு பெறலாம் என கூறப்பட்டது. அண்மையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை சந்திப்பதற்கு அன்புமணி தலைமை செயலகம் வந்த நிலையில், அவரை தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து வரவேற்றார் புஸ்ஸி ஆனந்த்.
அதோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் பங்கேற்றார் அன்புமணி. இப்படியாக தவெகவை பாமக நெருங்கி வருவதாகவும், இதன் காரணமாக இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இணையலாம் என அரசியல் வட்டாரத்தில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளது தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
அதாவது சென்னையில் பாமகவின் பொதுக்குழு நடைபெற்ற நிலையில், இந்நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி நல்ல யோசனைகளை தமிழ்நாடு அரசுக்கு நாங்கள் சொல்லி வருகிறோம். தமிழக அரசும் அதனை நல்ல வகையாக ஏற்றுக்கொள்கிறது. இதுதான் நல்ல அரசு என தவெகவுக்கு பாராட்டு தெரிவித்தார். அதோடு நாம் சொல்லும் ஆலோசனைகளை ஏற்று மாற்றங்களை கொண்டு வருகிறார்கள். இதையெல்லாம் வைத்து கூட்டணி பேசி விட்டதாக சொல்கிறார்கள்.
உடனே சேர்ந்துடுவாங்க. எத்தனை ஒன்றா அல்லது மூன்று அமைச்சர்களா? இப்படியெல்லாம் இவுங்களே பேசுகிறார்கள். இது அத்தனையும் வதந்திகள். தயவுசெய்து யாரும் நம்பாதீர்கள். நம்ம ஒரு ஆக்கப்பூர்வமான கட்சியாக இருக்கிறோம். நம்முடைய இலக்கு 2031. பல யோசனைகளை நம்ம கொண்டு வந்துட்டு இருக்கோம். இதற்கு முன்னாடியும் ஆலோசனைகள் சொன்னோம். அவர்கள் கேட்கவில்லை. இவர்கள் கேட்கிறார்கள். அவ்வளவுதான் என பேசியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
தவெக கூட்டணியில் பாமக இணைய போவதாக தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்த நிலையில், அவையெல்லாம் வதந்தி என சொல்லி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அன்புமணி. இதற்கிடையில் விசிகவை கூட்டணியில் இருந்து கழட்டி விடுவதற்கு தவெக தயாராகி விட்டது. இதன் காரணமாகவே பாமகவுடன் அக்கட்சி நெருங்கி வருவதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
