சென்னை: தாயம்மாள் அறவாணன் உட்பட மூன்று பேருக்கு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
ஞானபீட விருது, சாகித்ய அகாடமி விருது, தொல்காப்பியர் விருது, கருணாநிதி செம்மொழி தமிழ் விருது, உலகளாவிய நோபல் விருது பெற்றவர்களுக்கு, ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், உயர் வருவாய் பிரிவினருக்கான வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் அரசால் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்ற தாயம்மாள் அறவாணன்; புதிய தரிசனங்கள் என்ற நுாலிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற பொன்னீலன்.
‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.,யும் 1908’ என்ற நுாலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற வேங்கடாசலபதி ஆகியோருக்கு, 4.48 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
குடியிருப்புக்கான ஆவணங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார். அம்பேத்கரின் 27 படைப்புகள் ஏற்கனவே மொழி பெயர்க்கப்பட்டு தமிழில் வெளியிடப்பட்டன.
அதைத் தொடர்ந்து மூன்றாம் கட்டமாக, மராத்தி இதழ்களில் வெளிவந்த அவரது கடிதங்கள், அறிக்கைகள் உள்ளிட்ட அவரது ஆக்கங்கள், 73 தொகுதிகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. இவற்றை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
எழுத்தாளர் ஆனைமுத்து நுால்கள் அனைத் தும் நாட்டுடைமை ஆக்கப் பட்டு, நுாலுரிமை தொகை 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை, அவரது உறவினர்களிடம் வழங்கப்பட்டது.
கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, நுாலுரிமை தொகை 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, அவரது மனைவி சாந்தகுமாரியிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமை செயலர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி துறை செயலர் ராஜாராமன், செய்தித்துறை இயக்குநர் வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
