ஹைதராபாத்: தெலுங்கானாவின் ஹைதராபாதில் தாயை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சிறுமி, சட லத்தை வீட்டுக்குள் புதைத்தார். ஒரு ஆண்டுக்கு பின் துப்பு துலங்கியதை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கானாவின் ஹைதராபாதை சேர்ந்த பெண் அஞ்சு. வீட்டு வேலை செய்யும் தொழிலாளி. கணவரை பிரிந்து வாழ்ந்த இவருக்கு இரண்டு மகள்கள்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மே 12ல் வேலைக்கு சென்ற அஞ்சு மாயமானார்.
அவரது மூத்த மகள் ரோஷிணி குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 17ல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அஞ்சுவின் இளைய மகளே, பீஹாரை சேர்ந்த காதலன் மோந்தி குமார் சிங், 22, என்பவருடன் சேர்ந்து தாயை கொன்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி கூறியதாவது:
அஞ்சுவின் இளைய மகளுக்கு சமூகவலைதளம் மூலம், கடந்த 2023 டிசம்பரில் நண்பராக அறிமுகமான மோந்தி குமாருடன் காதல் மலர்ந்தது. இதையறிந்த தாய் அஞ்சு, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 2024 அக்டோபரில் சிறுமியுடன் தனிமையில் இருந்த போது மோந்தி சிக்கினார்.
இதையடுத்து போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்றார். 50 நாள் கழித்து விடுதலையானார். அதன் பின்னரும் சிறுமியுடனான உறவு தொடர்ந்தது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் அஞ்சுவை கொல்ல காதலன் மோந்தியுடன் சேர்ந்து சிறுமி திட்டமிட்டார்.
அதன்படி, கடந்த ஆண்டு மே 12ல், அஞ்சுவின் வீட்டில் மோந்தி பதுங்கியிருந்தார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அஞ்சுவை சிறுமி பிடித்து கொள்ள, மோந்தி சரமாரியாக நெஞ்சில் கத்தியால் குத்தினார். இதில் உயிரிழந்த அஞ்சுவை வீட்டுக்குள்ளே புதைத்து, அதன் மீது கான்கிரீட்டால் பூசி விட்டனர்.
வீடு திரும்பிய மூத்த மகள் ரோஷிணி கேட்டபோது அவசரமாக போன் அழைப்பு வந்ததால் தாய் அஞ்சு வெளியே சென்றுவிட்டதாகவும் அவரது போன், ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். வீட்டில் சிமென்ட் பூச்சு பற்றி கேட்டபோது, எலி தொல்லை இருந்ததால் துளைகளை அடைத்து பூசியுள்ளதாகவும் தங்கை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காதலனுடன் சென்ற சிறுமி, கடந்த ஜனவரி 8ல் திருமணம் செய்து கொண்டார். சடலம் புதைக்கப்பட்டிருப்பதை அறியாமலே மூத்த மகள் ரோஷிணி அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
