தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் – சீமான் அதிரடி மூவ் – ntk chief seeman announces protest against karthiga arrest

நாம் தமிழர் கட்சியினர் மீது பொய் வழக்குத் தொடுத்து சிறைப்படுத்திய தவெக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் அக்.24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார்.

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா அவரது கணவரும், தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முருக.சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரை பொய் வழக்கில் கைது செய்து இருப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் கைது

கார்த்திகா உள்ளிட்டோரை அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்துள்ளது தவெக அரசின் அடக்குமுறை என்று சீமான் விமர்சித்துள்ளார். அக்.24ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கார்த்திகா உள்பட 12 பேர் கைது ஏன்? – காவல்துறை விளக்கம்

இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கார்த்திகா உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து காவல்துறை விளக்கமளித்துள்ளது. “தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாமற்றும் அவருடன் இருந்தவர்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டனர். கடந்த 2ஆம் தேதி உடுமலைப்பேட்டை – தாராபுரம் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் பிளக்ஸ் பேனரை அகற்றுமாறு காவல்துறையினர் பலமுறை எச்சரித்தனர்.

காவல்துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததால் கைது

இருப்பினும், அதனை அகற்றவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், காவல்துறையினரிடம் தகாத வார்த்தைகளைப் பேசியதாக சஞ்சய் காந்தி மற்றும் ஷேக் பரித் ஆகியோர் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குப் பதிவைக் கண்டித்து கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையம் முன்பு திரண்டனர்.

இதையடுத்து, அனுமதியின்றி ஒன்றுகூடியது, பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியது, காவல்துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகளைப் பேசியது மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கார்த்திகா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 4ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை அணிந்திருந்த நபரையும் அவரது மனைவியையும் கார்த்திகா தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதே நாளில் முதலமைச்சரின் வருகையின்போது, அனுமதியின்றி திடீரெனக் கூடி இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாகக் கூறி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் 57 பேர் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link