திடீரென தீப்பற்றி எரிந்த கார்; சிதம்பரத்தில் பரபரப்பு!

சிதம்பரத்தில் நின்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்குச் சொந்தமான காரில் அவரது உறவினர்களான ஓட்டுநர் பிரவீன்(32), சிலம்பரசன்(37), ராகுல்(16), ராகவன்(16), ரோஷினி(12), தமிழினி(5) ஆகியோர் பரங்கிப்பேட்டை கடற்கரைக்கு சென்று விட்டு மீண்டும் சிதம்பரத்தை இன்று (29-03-26) மாலை வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சிதம்பரம் பெரியண்ணா குளம் அருகே காரை நிறுத்திவிட்டு காய்கறிகள் வாங்க ஓட்டுநர் சென்றுள்ளனர். அந்த நேரத்தில், காரிலிருந்து திடீரென புகை கிளம்பியது. அதைக் கவனித்த காரில் இருந்தவர்கள் உடனடியாக காரை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே கார் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

நின்றிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிதம்பரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Source link