புதுடில்லி: கிரிக்கெட் லீக் தொடரின் 19 வது சீசன் துவங்கி, 14 போட்டிகள் முடிந்துவிட்டன. ஒவ்வொரு அணிகளும் குறைந்தது 3 போட்டியில் பங்கேற்று விட்டனர். எனினும் முன்னணி பவுலர்கள் இன்னும் விக்கெட் கணக்கைத் துவக்காதது அந்த அணியின் வெற்றி வாய்ப்பை பாதித்து வருகிறது.
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, இதுவரை 3 போட்டியில் 82 ரன் (0/17, 0/28, 0/37) விட்டுக் கொடுத்த போதும், இன்னும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் நுார் அகமது, 3 போட்டியிலும் (0/24, 0/38, 0/49) ஏமாற்றியுள்ளார்.
‘டி-20’ உலக கோப்பை தொடரில் 14 விக்கெட் சாய்த்து மிரட்டியவர் வருண் சக்ரவர்த்தி. கொல்கட்டா அணிக்காக முதல் இரு போட்டியில் விக்கெட் கணக்கைத் (0/48, 0/31) துவக்கவில்லை. அதிக ரன்களையும் விட்டுத்தர, கடந்த போட்டியில் வருணுக்கு ‘ஓய்வு’ கொடுத்தது கொல்கட்டா.
சர்வதேச ‘டி-20’ல் அதிக விக்கெட் சாய்த்த ‘டாப்-2’ இந்திய பவுலர்கள் அர்ஷ்தீப் சிங் (127), பும்ரா (121). ஆனால், நடப்பு தொடரில் பஞ்சாப் அணிக்காக அர்ஷ்தீப் சிங் (0/42, 0/41, 0/16), மும்பை அணிக்காக பும்ரா (0/35, 0/21, 0/32) என இருவரும் தலா 3 போட்டியில் பங்கேற்ற நிலையில், இன்னும் ஒரு விக்கெட்டும் சாய்க்காதது ‘ஷாக்’ கொடுத்துள்ளது.
அடுத்து வரும் போட்டியில் இவர்கள் மீண்டு வருவர் என நம்பலாம்.
