திண்டிவனம்: திண்டிவனத்தில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவரை போலீசில் சிக்க வைக்க, அவரது வீட்டில் கஞ்சா

திண்டிவனம்: திண்டிவனத்தில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவரை போலீசில் சிக்க வைக்க, அவரது வீட்டில் கஞ்சா பொட்டலங்களை வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம், ஜெயபுரம், கர்ணாவூர் பாட்டையை சேர்ந்தவர் ஜான், இவரது மனைவி சந்திரிகா, 38; இவர், சென்னையை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம், சென்னை ஹவுசிங் போர்டில் வீட்டுமனை வாங்க 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

மேலும், திண்டிவனத்தை சேர்ந்த பலரிடமும் பணம் வாங்கி, வீட்டு மனைக்காக ரூ. 50 லட்சம் அளவில், நாகராஜிடம் சந்திரிகா கொடுத்ததாக கூறப்படுகிறது. பல மாதங்களாகியும் நாகராஜ், வீட்டு மனை வாங்கிக் கொடுக்காமலும், கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால், கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி சந்திரகா, நாகராஜிடம் கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், திண்டிவனம் டவுன் போலீசுக்கு, ஜான் என்பவர் வீட்டில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக மர்ம நபர் போனில் கூறியுள்ளார். அதன்பேரில், திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., தனிப்படை போலீசார்,ஜான் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்த போது, கருப்பு கலர் கவரில் சுற்றப்பட்ட 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, 2 வாலிபர்கள் ஜான் வீட்டில் கஞ்சா பொட்டலங்களை வீசிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, ஜான் மனைவி சந்திரிகாவிடம் போலீசார் விசாரித்தபோது, சென்னையை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம்கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட விபரம் தெரியவந்தது. அதையடுத்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான 2 நபர்கள் விசாரணை நடத்தியதில் அவர்கள் மீது ஏற்கனவே சென்னையில் வழக்கு இருப்பது தெரியவந்தது.

அதன் பேரில் திண்டிவனம் தனிப்படை போலீசார் சென்னை, டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த தயாளன் மகன் கார்த்திக், 32; அயனாவரம், பட்டாச்சாரி தெருவை சேர்ந்த உமாபதி மகன் ஜெகன், 38; ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சந்திரிகாவை கஞ்சா வழக்கில் சிக்க வைக்க நாகராஜ் துாண்டுதலின் பேரில், கஞ்சா பொட்டலங்களை வீசியது தெரியவந்தது.

இதற்கிடையில், பிரச்னைக்கு காரணமாக இருந்த சென்னை, ெஷனாய் நகரைச் சேர்ந்த நாராயணன் மகன் நாகராஜ், 42; என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும், திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Source link