திண்டுக்கல்: தி.மு.க., அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., பொருளாளர் சீனிவாசன், 'சேலை

திண்டுக்கல்: தி.மு.க., அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., பொருளாளர் சீனிவாசன், ‘சேலை கொடுத்துட்டாங்க, பாவாடை என்னாச்சு…’ என, பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் புழக்கம், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து, அ.தி.மு.க., கூட்டணி சார்பில், திண்டுக்கல்லில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “தேர்தலில், தி.மு.க.,வினர் பணத்தை வைத்து வீழ்த்தி விடலாம் என நினைக்கின்றனர்; 100 ரூபாய் மதிப்புள்ள ஹாட் பாக்ஸ், சேலை கொடுத்துள்ளனர். ”சேலை கொடுத்துட்டாங்க… பாவாடை இல்லாமல், எப்படி சேலையை கட்டுவது என பெண்களெல்லாம் கேட்கிறார்கள்,” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க., மகளிர் அணியினர், இந்த பேச்சை கேட்டு வாய்விட்டு சிரித்தனர். ஆனால், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சீனிவாசனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, அ.தி.மு.க., – ஐ.டி., பிரிவினரோ, ‘ஏற்கனவே, நடிகை நயன்தாரா பற்றி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது சிக்கலாகி இருக்கிறது. ‘இதில், இவரும் அநியாயத்துக்கு உளறுகிறாரே? ஒரு நாளைக்கு, ஒரு பிரச்னை என்றால் சமாளிக்கலாம். ஒட்டு மொத்தமா பிரச்னை வந்தால் எப்படி சமாளிக்கிறது’ என நொந்து போயுள்ளனர்.

இந்நிலையில், திண்டுக்கல்லில் பேட்டியளித்த சீனிவாசன், “எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த அ.தி.மு.க.,வை அழித்து, ஒழித்தது, துரோகி பன்னீர் செல்வம் தான். ”முதல்வர், துணை முதல்வர், ஓருங்கிணைப்பாளர் என பன்னீர் செல்வம், கடவுளால் நியமிக்கப்பட்டாரா?” என தெரிவித்தார்.

‘சட்டசபை தேர்தலில் வென்று, அடுத்து ஆட்சியமைக்கப்போவது தங்கள் கட்சி தான்,’ என அ.தி.மு.க.,வினர் கூறி வரும் நிலையில், ‘அ.தி.மு.க.,வை பன்னீர்செல்வம் அழித்து ஒழித்து விட்டார்,’ என கட்சி ஒழிந்து விட்டது போல, சீனிவாசன் கூறியதால், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

Source link