திண்டுக்கல்: ”பத்து தோல்வி பெற்றவரை சட்டசபை தேர்தலில் தி.மு.க., பெறும் வெற்றி மூலம் படுதோல்வி பழனிசாமியாக மாற்ற வேண்டும்,” என, திண்டுக்கல்லில் நடந்த திண்டுக்கல், தேனி மாவட்ட தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது : சட்டசபை தேர்தலை தொடர்ந்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் தமிழகம் வருகிறார்கள். ஆனால் திட்டங்களோ, நிதியையோ விடுவிப்பதில்லை. மத்திய அரசின் பாரபட்ச செயல்களை எதிர்த்து செயல்படும் ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால் அவர்கள் அ.தி.மு.க., உள்ளிட்ட 4 கட்சிகளை அடிமைகளாக்கி தமிழகத்திற்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள். இங்கு கருப்பு சிவப்பு வேட்டி கட்டிய தி.மு.க., கடைசி தொண்டன் இருக்கும் வரை அது நடக்காது. தமிழகத்தில் டில்லி அரசியல் எடுபடாது. அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் இந்த தேர்தல் டில்லி அணிக்கும், தமிழகத்துக்குமான என போட்டி என முழக்கமிடுகிறார்.
எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி அ.தி.மு.க., அலுவலகத்திற்கு செல்வதே பரபரப்பு செய்தியாகிறது. கட்சி தலைமையகம் ராயப்பேட்டையில் இருப்பதை மறந்து டில்லிக்கு அடிக்கடி சென்று வந்தார். முன் முகத்தை மூடியபடி சென்றவர் தற்போது திறந்த முகத்துடன் செல்கிறார். அதனால் அ.தி.மு.க.,வினருக்கும் சேர்த்து நாம் தான் பேசவேண்டியிருக்கிறது.
சீசன் நேரத்தில் போலி நிறுவனங்கள் ஒரிஜினலை போன்று பொருட்களை அசெம்பிள் செய்து ஏமாற்று வேலை செய்வார்கள். அந்தவகையில் அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை பா.ஜ., ‘மேட் இன் டில்லி’ பெயரில் அசெம்பிள் செய்திருக்கிறது. தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க.,வின் பியூைஸ பா.ஜ., பிடுங்கிடும். பீகாரில் பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் 10 முறை முதல்வராக இருந்தார். அவரையே அந்த பொறுப்பிலிருந்து விலக வைத்து விட்டனர். அவருக்கே அந்த நிலை என்றால் பழனிசாமி தன் நிலை என்னவென்று நினைத்து பார்க்க வேண்டும். தி.மு.க.,வுக்கு எதிராக பா.ஜ., அ.தி.மு.க., உள்ளிட்ட ‘பி’, ‘சி’ என எத்தனை ‘டீம்’ கொண்டு வந்தாலும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தான் சாம்பியன் என்றார்.

