திமுகவில் அதிரடி மாற்றம்: 20 மாவட்டச் செயலாளர்கள் நீக்கமா? மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு! – dmk internal reshuffle mk stalin to ax 20 underperforming district secretaries

திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) உள்கட்சி மறுசீரமைப்புப் பணிகள் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியைப் பலப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, சரியாகச் செயல்படாத மற்றும் கட்சிப் பணிகளில் தொய்வடைந்த 20 மாவட்டச் செயலாளர்களைப் பதவியில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயம் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கம் தென்னரசு குழுவின் ரகசியப் அறிக்கை

கட்சியின் உள்கட்டமைப்பை மாற்றி அமைப்பது மற்றும் புதிய மாவட்டங்களைப் பிரிப்பது தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க, தங்கம் தென்னரசு தலைமையில் 11 பேர் கொண்ட குழு ஒன்றை மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தார். இந்தக் குழுவினர் கடந்த சில வாரங்களாகத் தொடர் ஆலோசனைகளை நடத்தி, சரியாகச் செயல்படாத மாவட்டச் செயலாளர்களின் பட்டியலைத் தயார் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலினை, தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து இந்த ரகசியப் பரிந்துரை பட்டியலை ஒப்படைத்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் முடிவிலேயே, 20 மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இறுதி முடிவுக்குத் தலைமை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிருப்தியைத் தவிர்க்கப் புதிய வியூகம்

ஒரே நேரத்தில் 20 மாவட்டச் செயலாளர்களைப் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கினால், அவர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் கட்சிக்கு எவ்வித நெகட்டிவ் விமர்சனங்களும் வந்துவிடக் கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் மிகவும் தெளிவாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது.இதனைச் சமாளிக்க, பதவியிழந்த மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலானோருக்கு மாநில அளவிலான வேறு சில முக்கியப் பொறுப்புகளை வழங்கி சமாதானப்படுத்தத் தலைமை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உள்கட்சிப் பூசல்கள் வெடிக்காமல் தடுக்க முடியும் என அறிவாலய நிர்வாகிகள் நம்புகின்றனர்.

வாரிசுகளுக்குத் தடை மற்றும் 100 மாவட்டங்கள்

இந்த உள்கட்சி மறுசீரமைப்பில் மேலும் இரண்டு மிக முக்கிய முடிவுகளைத் தலைமை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.முதலாவதாக, இனிவரும் காலங்களில் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளுக்கு வாரிசுகளை நியமிக்கக் கூடாது என்பதில் தலைமை உறுதியாக உள்ளது.இரண்டாவதாக, திமுகவின் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்டங்களின் எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்கும் போது, அது களப்பணியில் மிகப்பெரிய சாதகமான மாற்றத்தை உருவாக்கும் என திமுக தலைமை முழுமையாக நம்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source link