இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய- திராவிட யுத்தம் தான் என வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர் என்றும், அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார் என்று சமூக நலத்துறை அமைச்சர் வன்னியரசு எக்ஸ்தளத்தில் பதவிட்டுள்ளார். பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் சீமான் எனவும், திராவிடக் கோட்பாட்டையும் சனாதன எதிர்ப்பையும் அரசியல் படுத்தியவர் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
பார்ப்பனிய அடிமை தான் சீமான்
கலைஞரை தெலுங்கன் என்றும் திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக, அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் சீமான் என்று அமைச்சர் வன்னியரசு காட்டமாக விமர்சித்துள்ளார். கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமை தான் சீமான் என கடுமையாக சாடியுள்ளார்.
கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது.
இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை என அமைச்சர் வன்னியரசு எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற வன்னியரசு
திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற வன்னியரசு, தேர்தல் முடிவுகளுக்கு பின் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணிக்கு சென்று அமைச்சராகியுள்ளார். தேர்தலின் போது வன்னியரசுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி தனது வெற்றியை விட அண்ணன் வன்னியரசு வெற்றி முக்கியம் என பேசினார்.
அப்படி திமுக கூட்டணியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக வலம் வந்த வன்னியரசு திமுகவையே வெட்கமில்லை என்று வசைபாடும் அளவிற்கு காரணம் என்ன? யார் எதிர்க்க சொன்னார்கள் உள்ளிட்ட கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது.
நாதக கார்த்திகா கைதும் – எதிர்க்கட்சிகள் கண்டனமும்
நாம் தமிழர் கட்சியின் தாராபுரம்(தனி) தொகுதி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கண்டனம் தெரிவித்தன. அதிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த கண்டன அறிக்கையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து அரசியலுக்கு வரும் பெண்களை கொள்கைக்கு அப்பால் பாராட்ட வேண்டும் என்றும், கார்த்திகா கைது செய்யப்பட்டதால் தவெக அரசுக்கு என்ன பயன் என்று வினவினார். இதற்கு தவெக அரசு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மாறாக காவல்துறை விளக்கம் மட்டுமே அளிக்கப்பட்டது. இந்நிலையில் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சிகளை வசைபாடுவதற்காக வன்னியரசு காட்டமாக பதிவிட்டுள்ளதாக திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
Source link
