காட்டுமன்னார்கோவில்: திமுக கூட்டணி கட்சிகளை கட்டுக்கோப்பாகவும், சிதறவிடாமல் பாதுகாத்ததிலும் எங்களுக்கு முதன்மையான பங்கு உண்டு என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோவில் தொகுதி விசிக வேட்பாளர் ஜோதிமணி, வேட்பு மனு தாக்கல் செய்த போது, திருமாவளவனும் உடன் இருந்தார். பின் அவர் அளித்த பேட்டி:
காட்டுமன்னார்கோவில் தொகுதி, விடுதலை சிறுத்தைகளின் தாய்மடியாக திகழ்கிறது. முதலில் இந்த தொகுதியில் நான் போட்டியிடுவதாக வேட்பாளராக அறிவித்தேன். பின், கூட்டணி நலன் கருதியும், விசிக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற தேவைகளை கருத்தில் கொண்டும், போட்டியிடும் முடிவை மாற்றிக் கொண்டேன்.
தமிழகம் முழுவதும் திமுக, கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பெருகி வருகிறது; 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும். திமுக, கூட்டணி கட்டுக்கோப்பாகவும், கூட்டணி கட்சிகளை சிதற விடாமல் பாதுகாத்ததிலும் விசிகவிற்கு முதன்மையான பங்கு உண்டு. கடலுார் மாவட்டத்தில் சமூக நல்லிணக்கம் நிலவுகிறது.
ஒரு காலத்தில் மாவட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தியும், வேட்பாளர் ஜோதிமணி தந்தை இளையபெருமாளும் எதிரும் புதிருமாக அரசியல் செய்து வந்தனர். இப்போது அந்த நிலை மாறி, இரு வாரிசுகளும் ஒற்றுமையாக களத்தில் இருப்பது வரலாற்றில் ஏற்பட்டுள்ள புரட்சி.
இந்த நல்லினக்கத்தை பேணி காப்பதில், எனக்கு பங்கு இருக்கிறது. நாம் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும், மத நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வை இந்த திருமாவளவனுக்கு உண்டு.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
