திமுக தான் டார்கெட்: 3 பைல், 2 கைது, தனுஷ்க்கு வைக்கும் செக்- முதல்வர் விஜய் அரசியல் பிளான் – tamil nadu cm vijay political rivalry plan against dmk with diversion of dhanush

தமிழக அரசியலில் திமுகவினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து வியூகங்களை தவெக தரப்பு நகர்த்தி வருகிறது. இன்றைய தினம் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே முதலமைச்சர் விஜய் தனது நகர்வில் மிகவும் தெளிவாக இருப்பதாக தெரிகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசும் போது, தனது டேபிளில் மூன்று பைல்கள் காத்திருக்கிறது. அதை எப்போது எடுக்க வேண்டும் என்று தனக்கு தெரியும். எடுக்க வைத்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் கூட செய்திருந்தார். எதற்காக நேரம் பார்த்து காத்திருக்கிறீர்கள். ஜோதிடர் நேரம் குறித்து தர வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

அதன்பிறகு திமுகவிற்கு எதிரான நகர்வுகள் கூர்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த மூன்று ஃபைல்களை பொறுத்தவரை திமுக முன்னாள் அமைச்சர்களாக கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகத்துறை, அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பள்ளிக் கல்வித்துறை, எ.வ.வேலுவின் பொதுப்பணித்துறை சம்பந்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இதில் இரண்டு பேரின் வழக்குகள் தொடர்பான அப்டேட்கள் இன்று அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

கே.என்.நேரு, அன்பில் மகேஷ் மனுக்கள் தள்ளுபடி

கே.என்.நேரு மனு தள்ளுபடி: கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனத்தில் 634 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அமலாகத்துறை கடிதம் அனுப்பியது. கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு கே.என்.நேரு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அன்பில் மகேஷ் மனு தள்ளுபடி: 2021-26 திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை தள்ளுபடி செய்து நீதிபதிகள் இன்று காலை உத்தரவிட்டனர்.

திமுக முன்னாள் அமைச்சர்கள் கைது நடவடிக்கை

இந்த இரண்டு வழக்குகளின் அடிப்படையில் பார்க்கும் போது அன்பில் மகேஷ் விரைவாக கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது. மேலும் கே.என்.நேருவிற்கு பிடி இறுகுகிறது. எனவே முதலமைச்சர் விஜய் தனது டேபிளில் உள்ள மூன்று பைல்களை தூசு தட்டி, அதில் இரண்டு பேரை கைது நடவடிக்கைக்கு ஆளாக்கும் வகையில் வேகம் காட்டுகிறார். இதன்மூலம் திமுக தான் தனது இலக்கு என்பதை ஆழமாக பதிவு செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது.

திமுக ஒரு தீய சக்தி- தவெக செய்யும் டார்கெட்

கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து பரப்புரை களத்திலும் சரி, ஆட்சிக்கு வந்த பின்னரும் சரி. திமுக ஒரு தீய சக்தி என்றும், அக்கட்சி செய்த ஊழல்களை வெளிக்கொண்டு வருவேன் என்றும் கங்கணம் கட்டி கொண்டு செயல்பட்டு வருகிறார். இந்த செயல்பாடுகள் அரசியல் களத்தில் தவெக vs திமுக என இருமுனை மோதலுக்கு வித்திட்டது. இது தேர்தல் களத்தில் இன்னும் வீரியம் பெற்றது. இந்த சூழலில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்ற தகவல் பெரிதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

திமுக இல்ல, 2031ல் தனுஷ் தான் – ரத்தன் பண்டிட் கணிப்பு

​தனுஷ் அடுத்தடுத்து நடத்தி வரும் கூட்டங்கள், சமீபத்திய டெல்லி சந்திப்பு, மகளிரணி நிர்வாகிகள் உடனான சந்திப்பு, அதில் தனுஷ் பேசிய விஷயங்கள் ஆகியவை அவரது அரசியல் வருகையை உறுதிபடுத்தும் வகையில் இருப்பதாக கூறுகின்றனர்.

இன்னும் சொல்லப் போனால் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, வரும் 2031 சட்டப்பேரவை தேர்தலில் விஜய் vs தனுஷ் என்ற போட்டி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. தனுஷின் ஜாதகம் எனக்கு தெரியும். அவரை நான் கணித்திருக்கிறேன். இதன்மூலம் இருபெரும் திராவிட கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஓரங்கட்டப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

​தவெக ஐடி விங் அதிரடி பதிவு
தவெகவின் எவர்கிரீன் டார்கெட் இதுதான்

எனவே இனிவரும் தமிழக அரசியல் களம் விஜய்க்கு எதிராக தனுஷை முன்னிறுத்தும் வகையில் இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை. திமுக தான் எங்களின் எவர்கிரீன் டார்கெட் என்று சொல்லும் வகையில் அமைச்சர்களின் வழக்குகள், கைது நடவடிக்கைகள் என முதலமைச்சர் விஜய் பக்கா வியூகங்களுடன் நகர்வதாக விவரம் தெரிந்தவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

சில மணி நேரங்களுக்கு முன்பு கூட தவெகவின் ஐடி விங் பக்கத்தில், இனி வரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள் என்று பதிவிட்டு வெடியை கொளுத்தி போட்டியிருக்கிறது.

Source link