திருச்சி: திமுக அரசின் திட்டங்களை காப்பியடித்து அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன என திருச்சியில் நடந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தொண்டர்கள் அன்பு
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடந்த திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த வாரம் பிறந்த நாள் கொண்டாடிய போது வாழ்த்து தெரிவித்த பிற மாநில தலைவர்கள், உங்கள் வயதை நம்ப முடியவில்லை என்றனர். என்னை இளமையாக வைத்திருப்பதற்கு காரணமே நீங்கள் தான்.உங்கள் அன்பு தான்.
தமிழகத்தின் முதல்வரானதற்கு காரணம் நீங்கள் தான். உங்களால் உயர்ந்தேன். உங்களால் வாழ்கிறேன். 200 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் இலக்கு என நேரு கூறிவிட்டார். இனிமேல் நாம் அடித்து ஆட வேண்டும்.
எந்நாளும்
ஸ்டாலின் தொடரட்டும் என்பது எனக்கான முழக்கம் அல்ல. திராவிடம், திமுக தொடரட்டும் என்பதற்கானது. திமுகவுக்கு இது 12வது மாநாடு.திருச்சி மாநாட்டில் திமுக தேர்தலில் போட்டியிட வேண்டும் என அண்ணாதுரை எடுத்தார். அது நடந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழகத்தை நாம் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் முதல் மாநில கட்சியாக ஆட்சியி்ல் அமர்த்தினார் அண்ணாதுரை. அவர் வழியில் கருணாநிதி 5 முறை ஆட்சி செய்தார். 10 ஆண்டுகள் கழித்து எனது தலைமையில் 6வது முறையாக ஆட்சிக்கு வந்தோம். இனிமேல் 7 வது முறை மட்டும் அல்ல. என்னாளும் திமுக தான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக கூடியுள்ளோம். இது நமது கடமை. இது நான் முதல்வர் ஆவதற்கும், சிலர் அமைச்சர், எம்எல்ஏ ஆவதற்கு சொல்லவில்லை.
மறுக்க முடியாது
தமிழகம் நம்மை நம்பிதான் இருக்கிறது. நாமும் தமிழகத்தை நம்பி இருக்கிறோம் திமுக ஆட்சி தொய்வில்லாமல் தொடர வேண்டும். இதற்காக உழைக்க வேண்டும். சூளுரைக்க வேண்டும். கடந்த 2021 தேர்தலுக்கு முன்னால் திருச்சியில் நடந்த மாநாட்டில் நான் கூறிய 7 இலக்குகளுக்கு உறுதி அளித்தேன். அதனை கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களில் நிறைவேற்றி உள்ளோம். மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். எதிர்க்கட்சிகள் மனதில் ஒப்புக் கொள்வார்கள். இதனை யாராலும் மறுக்க முடியாது
பிரம்மிப்பு
தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மறுக்கும் மத்திய பாஜ அரசு கூட தமிழகம் முதல் மாநிலம் என்கின்றனர். உலக பத்திரிகைகள் கூட சூப்பர் ஸ்டார் மாநிலம் என்கின்றனர். அந்தளவு கெத்தாக முன்னேறி உளளோம். கடந்த ஐந்துஆண்டுகளில் எத்தனையோ பிரச்னைகள், தடைகளை தாண்டி முன்னேறி உள்ளோம். 5 ஆண்டுகளில் இவ்வளவு செய்ய முடியமா என பிரமித்து பார்த்தனர். நமக்கே மலைப்பாக இருந்தது. தமிழகம் திமுக ஆட்சியில் 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. செய்ததை கூட நம்மால் சொல்ல முடியவில்லை அந்தளவு பட்டியல் உள்ளது.
நமது திட்டங்களினால் பயன் அடைந்தவர்கள் ஓட்டுப் போட்டாலே நாம் முழு வெற்றி அடைவோம். இதனை நாம் உறுதி செய்ய வேண்டும்.
நிறுத்த முடியாது
விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப் போகிறோம். மற்ற அரசியல் கட்சிகள் இன்ஸ்டால்மென்டில் தேர்தல் அறிக்கை வெளியிடுகின்றனர். நாம் நிறைவேற்றும் திட்டத்தை காப்பியடித்து அறிவிக்கின்றனர். அவர்களுக்கு வழியில்லை.நாம் ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை யாராலும் நிறுத்த முடியாது.
அவர்களின் தேர்தல் அறிக்கைக்கு கன்டென்ட் கொடுப்பதே ஸ்டாலின் திட்டம் தான். இந்த திட்டம் தமிழகத்தில் இருக்கும் வரை தமிழகத்தை ஸ்டாலின் தான் ஆட்சி செய்வான்.
தேஜ கூட்டணி
எதுவும் இல்லை
5 ஆண்டுகளில்,நமக்கு தர வேண்டிய கல்விநிதி, ஜல்ஜீவன் திட்ட நிதி,100 நாள் திட்ட நிதி,பேரிடர் நிதி எ ன நாம் கேட்ட எதையும் கொடுக்கவில்லை. எதனையும் தரவில்லை. சிறப்பு திட்டங்களை தரவில்லை.கோவை, திருச்சி, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு தரவில்லை. நல்லது செய்ய வேண்டும். ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மாநிலத்துக்கு கேட்டதையாவது கொடுத்து இருக்க வேண்டும். எதுவும் இல்லை.பாஜ தமிழகத்துக்கு கொடுத்தது எல்லாம் கவர்னர் மூலம் குடைச்சல், மாணவர்கள் உயிரோடு விளையாடும் நீட் தேர்வு, ஹிந்தித்திணிப்பு, மிரட்டிபார்க்க ரெய்டு. இப்படிப்பட்ட ஆட்சிதான் தேஜ ஆட்சி. தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யாத இவர்கள் தான் நம்மை எதிர்த்து நிற்கிறார்கள். தமிழகம் மேல் எவ்வளவு வன்மம் இருக்கிறது என்றால் தேர்தல் வரும் என நினைக்காமல் நமக்காக எதையாவதுஅறிவிக்கவில்லை.
நோ என்ட்ரி
திட்டமிட்டு புறக்கணிக்கும் என்டிஏவுக்கு மக்கள் எப்படி ஓட்டுப்போடுவார்கள்? எந்த நம்பிக்கையில் தமிழகத்திற்கு வருகிறீர்கள். கேட்பதை எல்லாம் நோ சொல்லும் என்டிஏவுக்கு தமிழகத்தில் நோ தான் சொல்லும். உங்களுக்கு எப்போதும் நோ என்ட்ரி தான். டப்பா என்ஜினுக்கு நோ என்ட்ரீ தான்.
தைரியம்
தமிழகம் எதிர்த்து டில்லி அணி என்றேன். தமிழக அணியா, டில்லி அணியா என்று சொன்னேன். உடனே நமது எதிரிகள், இது சட்டசபைக்கு நடக்கும் தேர்தல் தானே. இதனை தமிழகம் வெர்சஸ் என்டிஏ என சொல்லுது. தமிழகத்துக்கும் டில்லிக்குமான தேர்தல் என ஸ்டாலின்சொல்வது ஏன் என கேட்கின்றனர். திமுக என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் வரும் கட்சி அல்ல.மக்களின் உரிமைக்காக எப்போதும் களத்தில் நிற்கும் கட்சி. தமிழகம், தமிழ் பண்பாடு, தமிழ் கலாசாரத்தின் எதிரியை எதிர்க்கும் தெம்பும் திராணியும் கொண்ட ஒரே இயக்கம் திமுக என்பது மக்களுக்கு தெரியும்
அதிமுக என்ற முகமூடியை போட்டு வந்தால், மக்களுக்கு உங்களை அடையாளம் தெரியாமல் போய் விடுமா.உங்கள் முகத்திரையை கிழித்து மக்களிடம் அம்பலப்படுத்துவோம். தமிழகத்தை நம்மிடம் இருந்து விழுங்கி விடலாம் என நினைக்கிறது காவிக்கூட்டம்.கருப்பு சிவப்பு பட்டாளம் இருக்கும் வரை நடக்கவே நடக்காது.நடக்க விடமாட்டோம் இதனால் தான் அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகின்றனர்.
சொந்த நலனுக்காக
அரசியலில் எதிரியாக இருந்தாலும், அதிமுக தொண்டர்களை நினைத்து வருந்துகிறேன். அவர்களின் உணர்வுகளுக்கு மாறாக டில்லியில் கட்சியை அடமானம் வைத்துவிட்டார் இபிஎஸ்.தனது சொந்த நலனுக்காக சுயநலத்துக்காக, எப்படியாவது முதல்வர் ஆக வேண்டும் என்ற நப்பாசையில் அடிமையாக நிற்கிறது.அவரை வைத்து கட்சியை கொஞ்சம் கொஞ்சம் அழித்து வருகிறது.
அந்தர்பல்டி
பீஹாரில் நடப்பது அனைவருக்கும் தெரியும்.பீஹாரில் பாஜ முதல்வர் இருந்தது கிடையாது. நிதிஷ் குமாரை முன்னிறுத்தி வெற்றி பெற்ற பிறகு, காரியம் ஆன பிறகு பாஜ முதல்வரை கொண்டு வரப்போகிறது.இதனை தான் தமிழகத்திலும் செய்ய முயற்சி செய்கின்றனர். இதனை அடித்து சொல்கிறேன். சவால் விட்டு சொல்கிறேன், ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை பாஜவால் தமிழகத்தை ஆட்சி செய்ய முடியாது. நீங்கள் அந்தர்பல்டி அடித்தாலும் என்ன முகமூடி போட்டு வந்தாலும் புதிதாக யாரை கூட்டி வந்தாலும் எத்தனை ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டல் விடுத்தாலும் தமிழகம் உங்களுக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் தான்.
நாங்கள் பார்க்காத படையெடுப்பா? திமுக பார்க்காத மிரட்டலா? இந்தியா மேப்பில் எங்கு வேண்டுமானாலும் காவி அடிக்கலாம். தமிழகத்தில் உங்கள் பாச்சா பலிக்காது. இங்கு எப்போதும் நாங்கள் தான் எங்கள் மண்ணில்நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் மட்டுமே வெற்றி பெறுவோம். வெறும் தேர்தலுக்காக மட்டும் கூட்டணி வைக்கவில்லை. கொள்கை அடிப்படையில் கூட்டணி வைத்து அவர்களுக்கு உழைக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
