திமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வழக்கில் புதிய திருப்பம்: 3 மாதங்களில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவு – new twist in former dmk minister vaithilingam case court sets three month probe deadline

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், விசாரணையை விரைந்து முடித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டதாகக் கருதப்பட்டிருந்த இந்த வழக்கு மீண்டும் விசாரணை கட்டத்திற்குள் வந்துள்ளது.

ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

2011 முதல் 2016 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் , சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்காக ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 2022-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப்பதிவு

புகார் அளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தது. அதன் பின்னர் வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருந்த சூழலில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த ஜனவரி மாதம் திமுகவில் இணைந்தார். இதையடுத்து, அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, வழக்கை முடித்து வைக்க லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு புதிய திருப்பம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையை திரும்பப் பெறவும், வழக்கில் மேல் விசாரணைநடத்த அனுமதிவழங்கவும் லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தது.
வழக்கில் இன்னும் பல அம்சங்களை விரிவாக விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க வேண்டியிருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன், வைத்திலிங்கம் மீதான வழக்கில் மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்கினார். மேலும், விசாரணையை காலதாமதமின்றி முடித்து, மூன்று மாதங்களுக்குள் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

சீமான் வீட்டில் திமுக MLA! என்ன நடக்கிறது?

அரசியல் வட்டாரத்தில் கவனம்

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டதாகக் கருதப்பட்டிருந்த வழக்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது. மேல் விசாரணையில் புதிதாக என்ன ஆதாரங்கள் வெளிவருகின்றன, குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் தகவல்கள் கிடைக்குமா, அல்லது வழக்கின் நிலை மீண்டும் மாறுமா என்பது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் கவனிக்கப்படும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை எந்த திசையில் செல்கிறது என்பதுதான் இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

Source link