தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக 234 தொகுதிகளில் 70 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி மீதமுள்ள 164 தொகுதிகளில் ஆளும் திமுக நேரடியாக போட்டியிடுகிறது.
அந்த 164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 28ஆம் தேதி அறிவித்தார். அதனை தொடர்ந்து, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி என பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் திமுகவில் உள்ள தலைவர்களும் ஒவ்வொரு ஊர்கள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல்வர் அறிவித்த வேட்பாளர் பட்டியலில், ராணிப்பேட்டை தொகுதி அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்த் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவருடைய தந்தையும் அமைச்சருமான காந்தி அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது. குறிப்பாக வேட்பாளராக அறிவித்ததை அடுத்து மாவட்டச் செயலாளர் என்ற முறையில் தனது மகனுக்கே அமைச்சர் காந்தி ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வினோத் காந்திக்கு யாரும் ஒத்துழைப்பு தரக்கூடாது என்றும் அமைச்சர் காந்தி கூறியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை (06-04-26) ஒரு நாள் மட்டுமே உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் கட்சித் தலைமை வேட்பாளருக்கு ஏ பார்ம், பி பார்ம் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த பார்மை இதுவரை வினோத் காந்திக்கு திமுக தலைமை தரவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மாவட்டச் செயலாளர் என்ற முறையில் அந்த படிவங்களை அமைச்சர் காந்தியே வாங்கிருக்கிறார். இதன் மூலம் அமைச்சர் காந்தி நாளை (06-04-26) ராணிப்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மகனை வேட்பாளராக அறிவித்ததால் தந்தையே அவருக்கு போட்டியாக வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார்.
