திமுக 3 வருஷம் கழிச்சு பண்ணாங்க.. தவெக 60 நாள்லயே ஆரம்பிச்சுட்டாங்க: நயினார் நாகேந்திரன் கடும் அட்டாக் – bjp nainar nagendran criticized tvk govt regarding dmk mla arrest issue

திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்றைய தினம் காலையில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே முதல்வர் ஜோசப் விஜய்யை அவதூறாகவும், ஒருமையிலும் பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து தற்போது திமுக எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்த கைது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ள கருத்து தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

தமிழக அரசை விமர்சனம் செய்பவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். சமீபத்தில் பழனி கோயில் நில விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட திமுக ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அதிமுக நிர்வாகியும் இணையத்தில் பழனி கோவில் விவகாரம் தொடர்பாக பகிர்ந்த பதிவிற்காக கைது செய்யப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் கடுமையான விமர்சனங்களை கிளப்பியது.

சமூக வலைத்தள பதிவிற்காக கைது வரை செல்வதா? இது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன. இந்நிலையில் இன்றைய தினம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதல்வர் ஜோசப் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பினை கிளப்பியுள்ளது. இந்த கைதுக்கு எதிராக திமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக தவெக அரசினை விமர்சனம் செய்துள்ளார். அதாவது, கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் அவரிடம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கடந்த திமுக அரசாங்கமாவது 2,3 வருஷத்திற்கு பின்பு தான் இந்த வேலையெல்லாம் ஆரம்பிச்சாங்க.

ஆனால் இவுங்க வந்த 60 நாள்லயே ஆரம்பிச்சுட்டாங்க. ஏற்கனவே பல பேட்டியில் பாலியல் குற்றச்சம்பவங்கள் குறித்து பேசி இருக்கிறேன். ஒரு நாளைக்கு 3 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கிறது. திரைப்படத்தின் காட்சிகள் தான் ஆட்சியாக நடக்கிறது என்றும் விமர்சித்துள்ளார். அதோடு விமர்சனங்கள் பல வழிகளில் வரும். ஒரு முதல்வர் அதனையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். படத்தில் மட்டும் தான் ஜனநாயகம் உள்ளது.

ஆனால் மக்கள் மத்தியில் இந்த 60 நாளில் ஜனநாயகம் இல்லை. வெகு விரைவில் அது வெட்ட வெளிச்சத்திற்கு வரும். அமைச்சர்கள் லீவு கேட்குறாங்க. மூன்று மணி நேரம் லீவ் கேட்டாங்களாம். முதல்வர் கொடுக்கலையாம். ஒரு வேலை சொந்த வேலையாக லீவ் கேட்கிறார்களா என்று பார்த்தால், ஜனநாயகன் படம் பார்க்க லீவ் வேண்டுமாம். இவர்களை எல்லாம் வைச்சு நாட்ல நம்ம என்ன முடியும் என அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

முன்னதாக தவெக அமைச்சர் விக்னேஷ், ஜனநாயகன் படம் பார்க்கும் மூன்று மணி நேரம் மட்டும் பழைய ரசிகர்களாக செயல்பட முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளோம். இப்போது வரை அனுமதி கிடைக்கவில்லை. ஜனநாயகன் படம் பார்ப்பதற்காக விடுமுறை எடுத்துள்ளேன். கோவை போத்தனூரில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு விக்னேஷ் பேசியிருந்தது இணையத்தில் கவனம் ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Source link