'திராவிட மாடல் 2.0' ஆட்சி எங்கள் சாதனைகளை விஞ்சும் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: ”நாங்கள் அமைக்க போகும், ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி எங்கள் சாதனைகளை, நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும்,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில், அவர் பேசியதாவது:

கடந்த ஐந்தாண்டுகளில், ஐந்து பட்ஜெட், இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், இடைக்கால வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியை, அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் வந்து, இன்னும் கூடுதலாக தொடர்வோம் என்ற நம்பிக்கை, தமிழக மக்களைப் போலவே, எனக்கும் உள்ளது.

தலைமை பொறுப்பில் உள்ளோருக்கு பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, கால நேரம் பாராது உழைத்திடும் பண்பு, தீர்க்கமாக முடிவெடுக்கும் திறன், எதையும் தாங்கும் வல்லமை போன்ற பண்புகள் நிச்சயம் தேவை. இதையே நானும் கடைப்பிடித்திருக்கிறேன்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தால், இன்னும் வலிமை பெற்று, தமிழகத்தை இன்னும் ஏற்றம் பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையை பெற்றுள்ளேன். இந்த வாய்ப்பை தந்த, தமிழக மக்களுக்கு நன்றி.

கவர்னருக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. தமிழர்களுடைய சுயமரியாதை எள் முனையளவு சீண்டப்பட்டாலும், அது யாராக இருந்தாலும், எதிர்குரல் கொடுக்கும் திசையில், முதல் நபராக இருப்பேன். அவருக்கும் எனது நன்றி. சபாநாயகருக்கும் நன்றி.

அரசுக்கு தக்க யோசனைகளை கூறுவதிலும், குறைகளை சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையை கடைபிடித்த, ஒத்துழைப்பு அளித்த, எதிர்க்கட்சி தலைவர் சபைக்கு வரவில்லை. இருந்தாலும், அவருக்கும், மற்ற கட்சி தலைவர்களுக்கும் நன்றி.

முந்தைய அரசுகளின் செயல்பாட்டின் காரணமாக விளைந்த, மிக மோசமான பின்னடைவு; நமக்கு ஒத்துழைக்காத, ஓரவஞ்சனை செய்யக்கூடிய மத்திய அரசு ஆகியவற்றுக்கு இடையில், நாம் இருந்தோம்.

எனினும், தமிழகத்தில் அனைத்து துறைகளும், எப்போது வளரும் என்ற ஏக்கத்தில் இருந்தவர்களின் வாட்டத்தை போக்கி, சமச்சீரான வளர்ச்சியை, ஐந்து ஆண்டுகளில் அடைந்திருக்கிறோம்.

ஐந்து ஆண்டுகளில், மகளிர் உரிமைத்திட்டம், மகளிருக்கு இலவச பஸ் பயணம் என, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

நாளை நாங்கள் அமைக்கப் போகக்கூடிய, ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி, எங்கள் சாதனைகளை, நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும். உறுதியாக சொல்கிறேன். மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் உறுதி சட்டசபை வளாகத்தில், முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி: மன நிறைவுடன், ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்து, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி உள்ளேன். தமிழகத்தில், மீண்டும், தி.மு.க., தலைமையில் ஆட்சி அமையும். அது உறுதி. தற்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது, மக்களும், நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்கின்றனர். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. மீண்டும் சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Source link