கொல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான திரிணமுல் காங்கிரசின், 291 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை, அக்கட்சி தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார். பவானிபூர் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.
மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தமுள்ள, 294 தொகுதிகளில், 291ல், திரிணமுல் காங்., போட்டியிடுகிறது. மீதமுள்ள மூன்று தொகுதிகளில், அக்கட்சியின் கூட்டணி கட்சியான, அனித் தாப்பா தலைமையிலான பாரதிய கோர்க்கா பிரஜாதாந்திரிக் மோர்ச்சா போட்டியிடுகிறது.
இந்நிலையில், கொல்கட்டாவில் நேற்று, சட்டசபை தேர்தலில் போட்டி யிடும் திரிணமுல் காங்கிரசின் , 291 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி வெளியிட்டார்.
இதன்படி, பவானிபூர் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் அவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். 2021 சட்டசபை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் மம்தாவை சுவேந்து அதிகாரி தோற்கடித்தார். இருவரும் மீண்டும் ஒரே தொகுதியில் போட்டியிடுவது தேர்தல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.
திரிணமுல் காங்கிரசின் 291 வேட்பாளர்களில், 52 பெண்கள், 95 எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினர், 47 சிறுபான்மையினர் உள்ளனர். 74 ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ.,க்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. 135 சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
226ல் வெற்றி பெறுவோம்!
சட்டசபை தேர்தலில், 226 தொகுதிகளுக்கும் அதிகமாக திரிணமுல் காங்., வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும். பா.ஜ., உத்தரவுப்படியே, நேர்மையான அரசு அதிகாரிகளை தேர்தல் கமிஷன் மாற்றி வருகிறது. என்ன செய்தாலும் எங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. பா.ஜ.,வுக்கு சாதகமாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. இது ஊர் அறிந்த விஷயம். தேர்தலின் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், அதற்கு பா.ஜ.,-வும், தேர்தல் கமிஷனுமே பொறுப்பு.
– மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
