திருச்சி: திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று திமுக சார்பில் 12வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில், ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திருச்சி சிறுகனூரில் தேர்தல் அரசியல் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதற்காக திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான நேரு தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறுகனூர் மாநாட்டுக்காக 700 ஏக்கரில் மாநாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 200 ஏக்கரில் மாநாட்டு அரங்கமும், 240 அடி நீள பிரம்மாண்ட மேடையும் பிரம்மாண்ட எல்இடி திரையும் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, மாநாட்டுத் திடலில் 168 இடங்களில் எல்இடி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. கோட்டை வடிவில் 1,000 அடி நீளத்துக்கு பிரம்மாண்ட முகப்பு அமைக்கப்பட்டு ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன.
மாநாட்டில் 3.60 லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. 48 நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வருவோருக்கு குடிநீர் பாட்டில் அடங்கிய பை வழங்கப்படுகிறது. மேலும், மாநாட்டு திடலில் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று திருச்சி வருகிறார்.
மாநாட்டு வளாகத்தின் முகப்பில் உள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி விட்டு அரங்கிற்குள் செல்கிறார். அங்கிருந்து 600 அடி நீள ரேம்பில் நடந்து மேடைக்குச் செல்கிறார். 2021ம் ஆண்டைப்போல இந்த மாநாட்டிலும் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட உள்ளார்.
