திருச்சி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சியில் நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்தில், 6 வயது குழந்தை துவங்கி, படிக்கப்போகும் பிள்ளை, 60 வயது அம்மா வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சாதி என்பது அரசியலாகி, அதிகாரத்துக்கு வந்தால், சகோதரத்துவம் செத்துப் போய்விடும்.
மதம் என்பது அரசியலாகி அதிகாரத்துக்கு வந்தால், மனிதம் செத்துப் போய்விடும். பணம் என்பது அரசியலானால் பண்பாடு, ஒழுக்கம் செத்துப் போய்விடும்.
அனைத்தையும் தனியார் மயமாக்கி, கையெழுத்து போட்டவர்களே தி.மு.க.,வினர் தான். தனியார்மய பொருளாதார கொள்கையை ஏற்றபோதே, நாடு சந்தையாகி விடுகிறது.
கல்வி, மருத்துவம், மின் உற்பத்தி, சுகாதாரம், குடிநீர் என்று எல்லாம் தனியார் மயம்தான். சாராயக்கடை மட்டும் தான் அரசிடம் இருக்கிறது.
எனக்கு ஓட்டளிப்பவர்கள், மொழி, இனம், நாடு, மக்கள் நலன், நில வளம் இதையெல்லாம் பாதுகாக்கவும், அநியாயத்தை தடுக்கவும் நினைப்பவர்கள். நாங்கள் முன் வைக்கும் அரசியல், மக்களுக்கு தேவைப்படுகிறது. இந்த தேர்தலில் இருமுனை போட்டி தான்.
ஈரான் மீதான அமெரிக்காவின் போக்கு நல்லதல்ல. இந்த போர் என்ன நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது?
வட கொரியாவை தவிர, இந்தியா உட்பட பல நாடுகளும் வேடிக்கை பார்க்கின்றன. அதன் விளைவு, கல்லுாரி விடுதிகள், உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன.
வரும் தேர்தலுக்கு பெட்ரோல், டீசல் இல்லாமல், மிதி வண்டியில் சென்று தான் ஓட்டு கேட்க வேண்டும். லாரி இயக்கம் நின்றால், காய்கறி விலை உயரும். இந்த போரில், நியாயமில்லை; போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
