திருடன் – போலீஸ் கதை பரபரப்பு கூட்டியதா?

மாதம் ஒருமுறை விறுவிறுப்பான வெப் சீரிஸ்-களை ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் ஜி5 நிறுவனம் இந்த முறை காக்கி சர்க்கஸ் மூலம் கோதாவில் குதித்து இருக்கிறது. அது எந்த அளவு வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருக்கிறது?

தமிழ்நாடு கேரள பாடர்களில் ஓடும் ஒரு பேருந்தில் நடத்துனராக ராஜேஷ் மாதவன் வேலை செய்கிறார். அவர் தன் காதலிக்காக சின்ன சின்ன திருட்டு வேலைகளிலும் ஈடுபடுகிறார். மற்றொருபுறம் தமிழ்நாடு எல்லையில் இருக்கும் ஒரு சப்ஜெயிலில் முனீஷ்காந்த் ஜெயிலராகவும் அவருடன் நாயகன் சுபாஷ் செல்வம் போலீஸாகவும் இருக்கிறார். அந்த ஜெயிலுக்குள் வரும் கைதிகளுக்கு ஒரு புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்லி அதன் மூலம் அவர்களை திருத்த பார்க்கும் முனீஷ்காந்த் வருபவர்களிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அங்கு இருக்கும் கண்ணகி தேவி சாமிக்கு முன்னால் இருக்கும் உண்டியலில் பணம் போட சொல்லியும் கொடுக்கிறார். அந்த உண்டியல் நிறைந்தவுடன் சம்பந்தப்பட்ட கோயில் அதிகாரிகள் அதை எடுத்துக் கொண்டு போய் அபிஷேகம் செய்வது வழக்கம். அந்த உண்டியலை அங்கு இருக்கும் கைதிகள் சிலர் கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகின்றனர். ஒரு நாள் திடீரென அதில் இருக்கும் பணம் மாயமாகிவிடுகிறது. அதைக் கொள்ளையடித்தது யார்? அதை போலீசார் கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே இந்த வெப் சீரிஸின் மீதி கதை. 

எட்டு ஏழு எபிசோடுகளாக விரியும் இந்த வெப் சீரிஸ் வழக்கம்போல் சீரிஸ்-க்காண அத்தனை அம்சங்களோடும் விறுவிறுப்பாகவும் விவேகமாகவும் நகர்கிறது. ஒரு திருடன் போலீஸ் கதையை மலையாள வாசனையோடு அதேசமயம் தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் படி இரண்டுக்குமாக கலந்து கட்டி கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் அமீன் பாரிஃப். இவர் தான் சொல்ல வந்த விஷயத்தை நேர்த்தியாகவும் நிதானமாகவும் கூறி ஒரு வெப் சீரிஸை ஓரளவு ரசிக்கும்படி சீரியஸாகவே கொடுத்திருக்கிறார். இதற்கு முன் இந்த தளத்தில் வெளியான வெப்சீரிஸ்களில் இது சற்று விறுவிறுப்பு குறைந்த வெப் சீரிஸாகவே பார்க்கப்படுகிறது. திரைக்கதையில் ஏனோ பல்வேறு தேக்க நிலை, ஆங்காங்கே வேகத்தடைகள். அதேபோல் ஸ்லோ அண்ட் ஸ்டெடியாகவே செல்கிறது. அது மத்த வெப் சீரிஸ்களை காட்டிலும் இதை மந்தமாக காட்டுகிறது. இந்த சீரிஸுக்கு இன்னமும் விறுவிறுப்பு தேவை. 

நாயகன் சுபாஷ் செல்வம் போலீஸ் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். அவருக்கு ஜோடியாக நாயகி வின்சு சாம் வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார். ஜெயிலர் முனீஷ்காந்த் வித்தியாசமான வேடத்தில் கவர்ந்திருக்கிறார். மற்றொரு வில்லன் நாயகன் ராஜேஷ் மாதவன் தோற்றத்தில் சுமாராக இருந்தாலும் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். இவரின் வில்லத்தனம் அந்த கதைக்கு பக்காவாக சூட்டாகி இருக்கிறது. இவரின் ஜோடியாக நடித்திருக்கும் மலையாள நடிகை கௌதமி சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கமான நாயகியாகவே இவரும் வந்து செல்கிறார். மற்றபடி உடனடித்த போலீஸ்காரர்கள் மற்றும் மற்ற நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து வலு சேர்த்து இருக்கின்றனர். 

விபின் பாஸ்கர் அண்ட் சேவியர் இசையில் பின்னணி இசை கதைக்கு ஏற்றார் போல் அமைந்து ரசிக்க வைத்திருக்கிறது. நீரஜ் ரவி ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. இவரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. 

ஒரு பரபரப்பான கதையை மிகவும் சாதுரியமாக அதேசமயம் பரபரப்பு இல்லாமல் அமைதியாக செல்லும்படி சில பல வேகத்தடையோடு அமைதியான முறையில் கூறிய இயக்குநர் அமீன் அதை இன்னமும் விறுவிறுப்பாகவும் திருப்புமுனைகள் நிறைந்தும் கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும். திருடன் யார் என தெரியாமல் விழிப்பிதுங்கும் போலீஸ் மற்றும் திருடன் தெரிந்த பிறகு அவரை பிடிக்க முடியாமல் விழிப்பிதுங்கும் அதே போலீஸ் பிறகு வில்லனை போலீஸ் எப்படி பிடிக்கிறது போன்ற சுவாரஸ்யமான விஷயங்களை இன்னும் கூட சிறப்பான முறையில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி வேகமான திரைக்கதையோடு பல்வேறு ட்விஸ்டுகள் நிறைந்து கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பான சீரிஸாக இது அமைந்திருக்கும்.

காக்கி சர்க்கஸ் – திருடன் போலீஸ் அட்ராசிட்டி!

Source link