திருவள்ளூர்:
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தநிலையில் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 14-ந் தேதி (தமிழ்புத்தாண்டு) ஆகிய 2 நாட்களில் நடைபெறும் விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் இந்த 2 நாட்களில் திருத்தணி மலைக்கோவிலுக்கு பஸ், வேன், ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும் இட வசதிக்கேற்ப கார்கள், இருசக்கர வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
