திருநெல்வேலி: துாத்துக்குடி – திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள பொட்டலுாரணியில் செயல்படும் மூன்று மீன் அரவை ஆலைகளில், மீன் கழிவுகளை பயன்படுத்தி, கால்நடை தீவனம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இங்கிருந்து வெளியேறும் மாசு மற்றும் கழிவுநீரால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த ஆலைகளை அகற்ற வலியுறுத்தி, கடந்த லோக்சபா தேர்தலை மக்கள் புறக்கணித்தனர். முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இதனால், ஆலைகளை உடனடியாக மூட வலியுறுத்தி, கிராமம் முழுதும் கருப்புக்கொடி ஏற்றி, போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும் சட்டசபை தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாக, மக்கள் அறிவித்துள்ளனர்.
போராட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ள, திருநெல்வேலி மாவட்டம், கல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் சங்கரநாராயணன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் விடுப்பில் இருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
சங்கரநாராயணன் கூறுகையில், ”ஆலைகளை மூடாவிட்டால் சட்டசபை தேர்தலை முழுமையாக புறக்கணிக்க உள்ளோம். இதுகுறித்து அறிவிப்பு பேனர் வைத்துள்ளோம்,” என்றார்.
