திருப்பதி: தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் 34வது ஆண்டு விழா, ஆந்திர மாநிலம் திருப்பதியில், எஸ்.வி.ஆர்ட்ஸ்

திருப்பதி: தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் 34வது ஆண்டு விழா, ஆந்திர மாநிலம் திருப்பதியில், எஸ்.வி.ஆர்ட்ஸ் கல்லுாரியில் நடைபெற்றது.

விழாவுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி தலைமை தாங்கினார்.

விழாவில், தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் 33 – 34ம் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. இதில், 20 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மலரை, ‘ஸ்டடீஸ் இன் சவுத் இண்டியன் காயின்ஸ்’ புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் பி.வி.ராதாகிருஷ்ணன் அறிமுகப்படுத்தி பேசினார்.

பின், தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் தலைவர் வீரேந்தர், தன் ஆண்டு கட்டுரையை படித்தார்.

தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் கவுரவ தலைவர் ராஜா ரெட்டி, சங்கத்தின் பொதுச் செயலர் கோபால், நாணயவியல் அறிஞர்கள் டி.சத்தியமூர்த்தி, என்.ராமானுஜம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

எஸ்.வி.ஆர்ட்ஸ் கல்லுாரியின் வரலாற்றுப் பிரிவு தலைவர் டாக்டர் ஜி.கிஷண், நன்றியுரை ஆற்றினார். விழாவை கல்லுாரி முதல்வர் வேணுகோபால் ரெட்டி தொகுத்து வழங்கினார்.

விழாவின் ஒரு பகுதியாக, மைசூரு தென்னிந்திய நாணயவியல், 34ம் ஆண்டு விழாவுக்கான நாணய கண்காட்சியும், தென்னிந்திய கல்வெட்டுகளின் புகைப்பட கண்காட்சியும் நடைபெற்றன. கண்காட்சியை, தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் மற்றொரு தலைவர் டாக்டர் முனிரத்தினம் ரெட்டி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

விழாவில், நாணயவியல் அறிஞர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்தை, தென்னிந்திய நாணயவியல் சங்க கவுரவ தலைவர் ராஜா ரெட்டி, அறிஞர்கள் சத்தியமூர்த்தி, ராதாகிருஷ்ணன், முனிரத்தினம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

டாக்டர் முனிரத்தினம் ரெட்டி, ஆய்வுக் கட்டுரை வாசித்தார். திருப்பதி கோவில் உண்டியலில் கிடைக்கப் பெற்ற தங்க நாணயங்கள் பற்றி விளக்கி கூறினார்.

தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் சார்பில் இந்தாண்டு, பி.சி.பாட்டீல் அறக்கட்டளை சார்பான ஆய்வுக் கட்டுரையும் சமர்ப்பிக்கப்பட்டது. அகழாய்வுத் துறை மும்பை கிளை சார்பில், ஸ்ரீலட்சுமி என்பவர், முதல் கட்டுரையை வாசித்தார்.

விழாவில் நாணயவியல் அறிஞர்கள், கல்வெட்டியல் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Source link