திருப்பத்துார்: ”அ.தி.மு.க.,வே ஜெயித்தாலும் பா.ஜ., ஆட்சி தான் அமையும். தி.மு.க., கூட்டணியை தவிர எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் அது பா.ஜ.,க்கு தான் போய் சேரும். எங்க சாதனைகளை நாங்களே முறியடிக்கிற அளவுக்கு ஆட்சியை வழங்குவோம் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருப்புத்துார் அருகே வைரவன்பட்டியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 4 சட்டசபை தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சிவகங்கை மாவட்டத்திற்கு கேட்டதை எல்லாம் நிறைவேற்றி தந்துள்ளேன். எந்த மாவட்டத்திற்கு போனாலும் சாதனைகளை சொல்ல மிகப்பெரிய பட்டியல் என்னிடம் உள்ளது.
எம்.எல்.ஏ.,க்களை ஏலம் எடுத்து முதல்வரானவர் தான் பழனிசாமி. முதல்வரான இருந்த போது கூட அவர் நல்லது செய்யவில்லை.
மத்திய அரசின் தரவரிசையில் முக்கியமான இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தமிழகத்தின் வளர்ச்சி பின்னோக்கி போகிறது என்று உளறுகிறார்.
பொருளாதார வளர்ச்சியில் முதலிடம், உயர்கல்வியில் அதிக மாணவர்கள், வறுமை குறைந்த மாநிலத்தில் முதலிடம், பெண் பணியாளர்கள் அதிகம் உள்ள மாநிலம், ஏற்றுமதியில் முதலிடம் என தமிழகம் சிறப்பாக உள்ளது. கடந்த நிதியாண்டின் நிலவரப்படி இந்தியாவில் தொழில் உற்பத்தியில் தமிழகம் முதலிடம். இந்தியாவில் சிறந்த உயர்கல்வி உள்ள மாநிலம் தமிழ்நாடு. இதையெல்லாம் பா.ஜ., சொல்லாது. இதையெல்லாம் படிக்காமல் மத்திய அமைச்சர்கள் பேசுகிறார்கள்.
திருப்பரங்குன்றம் வந்த பிரதமர் மோடி ஏன் கீழடிக்கு வரவில்லை. அவரை எது தடுக்கிறது. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம் செய்தால் உச்சபட்ச தண்டனை கொடுக்கிறோம். பாலியல் குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை வரை கொடுக்க சட்டம் கொண்டு வந்துள்ளோம். பா.ஜ., ஆளும் குஜராத்தில் கூலி தொழிலாளியின் மகளான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை நீதிமன்றம் கண்டித்துள்ளது. காசியாபாத் போலீஸ் கமிஷனர் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 19 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டேயே உலுக்கியது. குஜராத்தில் மோடியின் அரசு கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளை விடுதலை செய்தது. இன்னும் மணிப்பூரில் குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
பா.ஜ., கூட்டணி ஆட்சியில் குற்றவாளிகள் தான் ஆட்சி அமைப்பார்கள். அ.தி.மு.க., ஆட்சியின் அலங்கோலங்கள் சீன பெருஞ்சுவர் போல் நீண்டு கொண்டே போகும். தி.மு.க., ஆட்சியில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். சூப்பர் ஸ்டார் தி.மு.க., தேர்தல் அறிக்கை தான். இல்லரத்தரசிகள் திட்டத்தில் தி.மு.க., அரசு கொடுக்க உள்ள ரூ.8 ஆயிரத்தில் என்ன பொருள் வாங்க வேண்டும் என்று கணவரிடம் கேட்கக்கூடாது.
பிடித்த பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள். கணவர் கேட்டால் அண்ணனிடம் புகார் செய்து விடுவோம் என்று கூறுங்கள். எட்டு எட்டா மனித வாழ்க்கையை பிரித்துக்கோ என்று ரஜினி பாட்டு பாடுவார். அதை போன்று தாங்களும் பிரித்து கொள்ள வேண்டும். ஸ்டாலினுக்காக பெண்கள் பிரசாரத்தில் இறங்க வேண்டும். சமீபத்தில் பத்திரிகை ஒன்று நடத்திய ஆய்வில் விடியல் பயண திட்டத்தை பெண்கள் வரவேற்று இதுவரை தி.மு.க.,விற்கு வாக்களிக்காத பெண்கள் கூட இந்த முறை தி.மு.க. விற்கு வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க.,வே ஜெயித்தாலும் பா.ஜ., ஆட்சி தான் அமையும். தி.மு.க., கூட்டணியை தவிர எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் அது பா.ஜ.,க்கு தான் போய் சேரும். எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கிற அளவுக்கு ஆட்சியை வழங்குவோம். என்றார்.
அமைச்சர்கள் பெரியகருப்பன், ரகுபதி வரவேற்றனர். எம்.பி.,க்கள் சிதம்பரம், கார்த்தி,மற்றும் மருது அழகுராஜ், அசோகன் கலந்து கொண்டனர்.
நேற்றிரவு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி செல்லும் வழியில் சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
