திருப்பரங்குன்றம் தீபத்துாண் அருகே வழிபாடு: அரசு முடிவெடுக்க உயர் நீதிமன்றம் அவகாசம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் கொண்ட குழுவை மலை உச்சி தீபத்துாண் அருகே வழிபட அனுமதிப்பது குறித்த நிலைப்பாட்டை அரசு தரப்பில் தெரிவிக்க அவகாசம் அளிக்கப்படுகிறது’ என அந்த நீதிபதி உத்தரவிட்டார். இதில் அரசியல் கூடாது என்றார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக, மார்ச் 2ல் நடந்த விசாரணையின்போது கலெக்டர் பிரவின் குமார் ஆஜரானார்.

அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் கொண்ட குழுவை, தீபத்துாண் அமைந்துள்ள மலை உச்சிக்குச் சென்று 15 நிமிடம் அடையாள வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் என பரிந்துரைக்கிறேன். இது வழிகாட்டுதல் அல்ல என்றார். இதற்கு அரசு தரப்பில்,’பின், கருத்து தெரிவிக்கப்படும்,’ என்றனர். மார்ச் 4 மாலை 4:00 மணிக்கு மதுரை போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர், உதவி கமிஷனர், கோயில் இன்ஸ்பெக்டர், கோயிலின் தற்போதைய அறங்காவலர்கள், நிர்வாக அலுவலர் ஆஜராக வேண்டும்,எனவும் நீதிபதி உத்தரவிட்டார். நேற்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன், உதவி கமிஷனர் சசிபிரியா, திருப்பரங்குன்றம் கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், சண்முகசுந்தரம், பொம்மதேவன், ராமய்யா, கோயிலின் தற்போதைய செயல் அலுவலர் ஞானசேகரன் ஆஜராகினர். அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீராகதிரவன், ரவீந்திரன், கோயில் நிர்வாகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், போலீஸ் கமிஷனர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் இளங்கோ, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், சுப்பையா ஆஜராகினர்.

சட்டரீதியான ஒப்புதல்

அரசு தரப்பு: வழிபாடு செய்ய அனுமதிக்கும் நீதிமன்றத்தின் புது உத்தரவு குறித்து கோயில் ஸ்தானிகரிடம் மட்டுமல்லாது அறநிலையத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். சட்டரீதியான ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதில் ஆகம விதிகளை பின்பற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. இதை விவாதித்து நீதிமன்ற புது உத்தரவை நிறைவேற்றுவது குறித்த மேற்கண்டவாறு ஒப்புதல் பெற அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஐந்துபேர் குழுவிற்கு பதிலாக ஸ்தானிகரை வழிபாடு செய்ய அனுமதிக்கலாம். தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த அமர்வு,’தமிழ் மாதமான கார்த்திகையில் வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கோயில் நிர்வாகம் தனது குழுவின் மூலம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்,’ என உத்தரவிட்டது. எனவே இந்த அவமதிப்பு வழக்கு நிலைக்கத்தக்கதல்ல. நீண்டகாலமாக அவமதிப்பு வழக்கை நிலுவையில் வைத்திருக்க முடியாது.

கோயில் நிர்வாகம் தனது குழுவின் மூலம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற இரு நீதிபதிகளின் உத்தரவின் அக்குறிப்பிட்ட பகுதியை எதிர்த்து, ராம ரவிக்குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இரு நீதிபதிகளின் உத்தரவை சீராய்வு செய்ய அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புது உத்தரவை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்க 2 வாரங்கள் அவகாசம் தேவை.

பின்வாங்கினால் எப்படி நீதிபதி: உச்சநீதிமன்றத்தின் புது உத்தரவுப்படி இந்த அவமதிப்பு வழக்கை தொடர்ந்து நடத்தலாம். நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படும் என்பதன் முன்னெடுப்பாகவே நீதிமன்றம் பரிந்துரைக்கும் 5 பேரை பூஜை செய்ய அனுமதிப்பது குறித்து முடிவெடுக்குமாறு கூறினேன். அதிலிருந்தும் பின்வாங்கினால் எப்படி?

கோயிலுக்கு சொந்தமான சொத்தான தீபத்துாண் அமைந்துள்ள பகுதியை பாதுகாக்க கோயில் நிர்வாகம் தவறிவிட்டது. மனுதாரர்கள்தான் இந்நீதிமன்றத்தை நாடி அதன் உரிமையை நிலைநாட்டியுள்ளனர். அவர்களைத்தான் தீபத்துாண் அருகே வழிபட அனுமதிக்க வேண்டும். மனுதாரர் தரப்பு: சட்டசபை தேர்தல் மற்றும் தேர்தலில் ஓட்டுவாங்குவதில் பிரச்னையை சந்திப்பதை தவிர்க்கும் வகையில் அரசு தரப்பில் விசாரணையை 2 வாரங்கள் ஒத்திவைக்க கோருகின்றனர். இவ்விவகாரத்தில் அமைச்சரே சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். நீதிபதி: இதில் அரசியல் கூடாது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தாலும் மனுதாரர்கள், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் இங்கு தான் இருப்பர். இவ்வழக்கு விசாரணை நடக்கும். தற்போது தீபம் ஏற்ற வேண்டும் என நான் கூறவில்லை. அங்கு சென்று வழிபட 5 பேரை அனுமதிக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன். அனுமதி அளித்தால் இவ்வழக்கை முடித்து வைக்கின்றேன். இல்லையெனில் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும்.

மலை உச்சி தீபத்துாண் அருகே மலர் துாவி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படும் என்ற பதிலுடன் கோயில் நிர்வாகம் அடுத்த கட்ட விசாரணையின்போது நீதிமன்றத்திற்கு வரவேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது. பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா உள்ளிட்ட 5 பேரை இந்த நீதிமன்றம் எதிர்மனுதாரராக வழக்கில் சேர்க்கலாம் என கருதியது. ஆனால் சேர்க்கவில்லை. போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யலாம் என கருதினேன். அரசு தரப்பில் அவகாசம் கோரியதால் அவ்வாறு செய்யாமல் தவிர்க்கிறேன். விசாரணை மார்ச் 18க்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Source link