மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியை கேட்டு பா.ஜ., அடம் பிடிக்க, ‘இது எங்கள் கோட்டை. விட்டுக்கொடுக்க முடியாது’ என அ.தி.மு.க., உறுதியாக இருந்து, மீண்டும் ராஜன் செல்லப்பாவை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகாரத்தில், பா.ஜ.,வுக்கு ஹிந்துக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வரவேற்பை ஓட்டுகளாக மாற்ற திட்டமிட்ட அக்கட்சி, திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை தெற்கு தொகுதியை தங்களுக்கு ஒதுக்கும்படி கேட்டது.
ஆனால் ‘சிட்டிங்’ அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,வான ராஜன் செல்லப்பாவுக்கு தொகுதியில் நல்ல பெயர் இருப்பதாலும், ‘சீனியர்’ என்பதாலும் திருப்பரங்குன்றம் தொகுதியை பா.ஜ.,வுக்கு ஒதுக்க பழனிசாமி தயங்கினார். அதேசமயம் மதுரை தெற்கு தொகுதியை ஒதுக்க முன்வந்தார்.
தெற்கு தொகுதியில் ஏற்கனவே அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எஸ்.ஆர்.ராதா, ஓ.எஸ்.அமர்நாத், எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ.,க் களாக இருந்தபோதிலும், அவர்கள் சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இத்தொகுதியில் சவுராஷ்டிரா சமூகத்தினர் அதிகம் உள்ளதாலும், இவர்களில் பெரும்பாலோர் ஹிந்து அமைப்புகள், பா.ஜ., ஆதரவாளர்களாக இருப்பதாலும் பழனிசாமி அத்தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வந்தார்.
முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, 1991 முதல் திருப்பரங்குன்றம் ‘அ.தி.மு.க., கோட்டை’ யாகவே இருந்து வருகிறது. 2011 முதல் சீனிவாசன், போஸ் என தொடர்ந்து அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களாக இருந்தனர்.
இத்தொகுதியின் கீழ்தான் எய்ம்ஸ் மருத்துவமனை, சர்வதேச விமான நிலையம் உள்ளன. இதன் காரணமாகவும், அ.தி.மு.க., கோட்டை என்பதாலும், ‘சிட்டிங்’ தொகுதிகளை விட்டுக்கொடுக்க முடியாது என்ற பழனிசாமியின் பிடிவாதமும்தான், திருப்பரங்குன்றத்தை மீண்டும் அ.தி.மு.க., வசமாக்கியுள்ளது.
