திருப்பூர்: திருப்பூரில், 39 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு, திறப்பு விழா கண்ட, ‘டைடல் நியோ பார்க்’கில், ஐ.டி., நிறுவனங்கள் எதுவும் வராமல் இருப்பதால், கட்டடங்கள் காலியாகவே உள்ளன.
திருப்பூர் மாவட்டம், திரு முருகன் பூண்டியில், 39.44 கோடி ரூபாய் செலவில், 65,37 9 சதுர அடி பரப்பளவில், தரைதளம் உட்பட, எட்டு அடுக்கு கட்டடமாக ‘டைடல் நியோ’ பார்க் உருவெடுத்தது.
ஏழு நிறுவனங்கள் செயல்படும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, 650 பேர் வரை அமர்ந்து பணிபுரிவதற்குரிய உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டன. இதை 2025 ஆக., 11ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில், 5 மற்றும், 2ம் தளத்தில் மட்டுமே நிறுவனங்கள் இயங்குகின்றன. எஞ்சிய தளங்கள் காலியாகவே உள்ளன.
கோவையில் ஐ.டி., நிறுவனம் நடத்தி வரும் ஸ்ரீராம் கூறியதாவது:
திருப்பூர் மட்டுமின்றி, எந்தவொரு நகரத்திலும், ஐ.டி., பார்க் உருவாவது வரவேற்கத்தக்கது.
தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில், ஐ.டி., தொழில் துறையின் மூலம் கிடைக்கும் பலன்கள் அதிகம். திருப்பூரை பொறுத்தவரை ஏற்கனவே ஆடை ஏற்றுமதி தொழிலின் கேந்திரமாக இருந்து, அன்னிய செலாவணி ஈட்டி வரும் நிலையில், அதோடு ஐ.டி., துறையும் நுழையும்போது, நல்ல முன்னேற்றம் தென்படும்.
திருப்பூரின் பொருளாதாரம் மேலும் மேம்படும் வாய்ப்பு கிடைக்கும். ஐ.டி., நிறுவனங்களால் கிடைக்கும் இத்தகைய நேரடி பலன் ஒருபுறமிருந்தாலும், அதோடு தொடர்புடைய பிற தொழில்கள், உதாரணமாக, உணவு, உடை, கால் டாக்ஸி உள்ளிட்ட தொழில்-களின் தேவை அதிகரிக்கும்.
இதனால் அத்தொழில் சார்ந்தோரின் வாழ்வாதாரமும் மேம்படும். ஐ.டி., நிறுவனங்களால் நேரடி மற்றும் மறைமுக பலன்கள் அதிகம் .
இவ்வாறு கூறினார்.
டைடல் பார்க் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘திருப்பூர், சேலம், தஞ்சை, துாத்துக்குடி, வேலுார் உள்ளிட்ட இடங்களில் ஒரே சமயத்தில் தான் டைடல் நியோ பார்க் கட்டுமானப்பணி நடந்தது. திருப்பூரில் கட்டுமானப்பணி முடிய சற்று தாமதமானது.
‘நிறுவனங்களை கொண்டு வருவதற்கான பேச்சு நடந்து வருகிறது. அடுத்த மாதத்திற்குள் நிறுவன ங்கள் வந்துவிடும். பிற மாவட்டங்களில் திறக்கப்பட்ட டைடல் பார்க்கில் அனைத்து கட்டடங்களிலும் நிறுவனங்கள் செயல்பட துவங்கிவிட்டன’ என்றனர்.
