திருப்பூர்: திருப்பூர் தொழில்துறையினர், அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செயல்திறனை இரட்டிப்பாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.) தலைவர் சக்திவேல் தலைமையில், திருப்பூர் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோரை நேற்று சந்தித்து பேசினர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் இளங்கோவன், ஆலோசனைக் குழு உறுப்பினர் பரமசிவம், செயற்குழு உறுப்பினர் ராமு உட்பட, ஜவுளி மற்றும் ஆடைத் தொழில் அமைப்புகளைச் சேர்ந்த 45 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆன்லைன் மூலம் தீர்வு சந்திப்பின் போது, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கும். ஏற்றுமதியாளர்கள் தங்களது பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்து விரைவாக தீர்வு பெறுவதற்காக சிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது. இந்தியா இதுவரை, 38 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்காவுடன் முக்கிய இடைக்கால வர்த்தக ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆடைத்துறையினருக்கு அழைப்பு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும், கையெழுத்தாகும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, அதன் பயன்கள் நாடு முழுவதும் உள்ள தொழில்துறைக்கும், அதில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் சென்றடையச் செய்ய வேண்டும். வங்கதேசம் பெறும் பருத்தி தகுதி சலுகைகள், அமெரிக்காவுடன் முன்பே செய்த வர்த்தக ஒப்பந்தம் காரணமாக வழங்கப்பட்டவை.
இந்தியாவும் விரைவில் இதே போன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. இந்தியாவுக்கும் இதேபோன்ற நன்மைகள் கிடைக்கும். திருப்பூர் தொழில்துறையினர், அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக, 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதி செயல்திறனை இரட்டிப்பாக்க வேண்டும். இவ்வாறு, அமைச்சர் கூறியுள்ளார்.
சந்திப்பில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள், இந்த வர்த்தக ஒப்பந்தங்களால் உருவாகும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த உறுதியளித்தனர். மத்திய அரசின் உலகளாவிய வர்த்தக நிலையை வலுப்படுத்தும் முயற்சிகளைப் பாராட்டினர்.
ஆடை ஏற்றுமதிக்கு பயன்தரும் ஒப்பந்தங்கள்
இந்தியாவின் வர்த்தக வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய மற்றும் நேர்மறையான முயற்சிகளுக்கு நன்றி. அனைத்து ஒப்பந்தங்களுக்கும் ‘தாய் ஒப்பந்தம்’ எனக் குறிப்பிடப்படும், இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். – சக்திவேல், ஏ.இ.பி.சி. தலைவர்
