திருப்பூர்: திருப்பூர் நீதிமன்றம் அருகே பலத்த சத்தத்துடன் வெடிபொருள் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அவிநாசி சேவூர் ரோடு பகுதியில் திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியில் வார நாட்களில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் இருப்பது வழக்கம். இந்த சூழலில், இன்று நீதிமன்றம் அருகே பலத்த சத்தத்துடன் வெடிபொருள் ஒன்று வெடித்து சிதறியுள்ளது.
இதனால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால், வெடிபொருள் வெடித்ததால் ஏற்பட்ட அதிர்வினால், 100 மீட்டர் தொலைவிலுள்ள கட்டட கண்ணாடிகள் உடைந்தன. மேலும், வெடிச்சத்தம் 300 மீட்டர் சுற்றளவுக்கு கேட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அவிநாசி போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். வெடித்து சிதறிய பொருள் என்ன? அது எப்படி இங்கு வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
