திருப்பூர்: மாநில நெடுஞ்சாலையில் புதுப்பிக்கப்படும் மைல் கல்லில் எழுதப்பட்டுள்ள ஊர் மற்றும் இடங்களின் பெயரில், எழுத்துப்பிழை இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகம் முழுக்க, மாநில நெடுஞ்சாலை சார்பில், சாலை விரிவாக்கம் மற்றும் புதுப்பிப்பு பணி நடந்து வருகிறது. ஆங்காங்கே உள்ள மைல் கற்களும் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு வருகின்றன. இதில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் – தாராபுரம் இடைபட்ட மாநில நெடுஞ்சாலையில், (எஸ்.எச்.174-ஏ) உள்ள மைல் கல்லில், ‘கோவை விமான நிலையம்’ என்பது, ‘கேவை’ விமான நிலையம் எனவும், ‘சோமனுார்’ என்ற ஊரின் பெயரில், ‘சேமனுார்’ எனவும் எழுதப்பட்டுள்ளது.
இதேபோல, இன்னும் பல மைல் கல்லில் எழுத்துப்பிழை உள்ளது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழை வளர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறும் தமிழக அரசு, முதலில், தங்கள் துறை சார்ந்த பணிகளிலேயே எழுத்துப்பிழை இருப்பதை தவிர்க்க வேண்டும் எனக்கூறி வருகின்றனர்.
இது குறித்து, பா.ஜ. மாநில பொது செயலாளர் முருகானந்தம் கூறுகையில், ”கடந்த, 50 ஆண்டுகாலமாக தமிழகத்தில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் மாறி மாறி இருந்து வரும் தி.மு.க. தமிழை வளர்க்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறி வருகிறது. அது எந்தளவில் இருக்கிறது, என்பதற்கு, நெடுஞ்சாலையில் உள்ள மைல் கற்களே சாட்சி.
ஹிந்தியை, தார் வைத்து அழித்து வருபவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ‘திராவிட மாடல்’ தி.மு.க. தமிழை வளர்ப்பது இந்தளவில் தான் உள்ளது. தமிழை வளர்க்காமல், புல்டோசர் வைத்து நசுக்குவது போல, தமிழ்க் கொலை நடந்துள்ளது,” என்றார்.
