திருப்போரூர் : ''முதல்வர் ஸ்டாலின், விளம்பரங்களில் நடிக்கும் நடிகராக உள்ளார்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி

திருப்போரூர் : ”முதல்வர் ஸ்டாலின், விளம்பரங்களில் நடிக்கும் நடிகராக உள்ளார்,” என, பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் வழக்கறிஞர் பாலுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த அன்புமணி பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெண் குழந்தைகளுக்கு எதிராக 62 ஆயிரம் குற்றங்கள் நடந்துள்ளன.

இவற்றை தடுக்க முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர், விளம்பரங்களில் நடிக்கும் நடிகராகவே இருக்கிறார். திருப்போரூர் தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.க., வேட்பாளர் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்.

இயற்கை வளங்கள் நிறைந்த திருப்போரூர் தொகுதியில் எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களும் இல்லை. இத்தொகுதியில் மீனவர்கள் அதிகம் நிறைந்துள்ளனர். அவர்கள் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்ற எந்த விதத்திலும் முன்னேறவில்லை. நான் ஒரு மருத்துவராக சொல்கிறேன்; தமிழகத்தில் போதைப்பொருட்கள் தாராளமாக வந்துவிட்டன.

வெளிநாட்டில் பயன்படுத்தும் உயர்தர போதை பொருட்களும் கிராம பகுதிகளில்கூட கிடைக்கின்றன. இதெல்லாம் சாதாரண குற்றம் இல்லை. உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், தி.மு.க., அரசை புறக்கணிக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி பேசினார்.

Source link