திருமணமான ஒருவர் வேறொருவருடன் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், மனைவியுடன் கட்டாயப்படுத்தி உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை அல்ல என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் விவாதத்தை கிளப்பி இருக்கின்றன.
இந்நிலையில் நடிகையும், தமிழக பாஜக துணைத் தலைவருமான குஷ்பு இந்தத் தீர்ப்புகள் குறித்த தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” நீதிமன்றங்களின் இந்தத் தீர்ப்புகள் மனவேதனையையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. சமூகத்தைப் பின்னோக்கி இழுத்து செல்வது போல இந்தத் தீர்ப்புகள் இருக்கின்றன.
நீதிமன்றங்கள் மற்றும் சட்டத்தின் மீது உள்ள மரியாதையுடன் சொல்கிறேன், பெண்களுக்கு இப்படிப்பட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டால், அவர்கள் நீதிக்காக எங்கே போவார்கள்?. இயற்கையான அல்லது இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வேண்டாம் என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டு.
அதேபோல ஒரு பெண் வேண்டாம் என்று சொன்னால், அதற்கு வேண்டாம் என்றுதான் அர்த்தம். ஆண்கள் அதை மதிக்க வேண்டும். கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வாகவே கருதப்பட வேண்டும்.
மேலும், ஒரு ஆண் திருமணமான நிலையில் இருக்கும்போதே, இன்னொரு பெண்ணுடன் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது சரியா? இந்த விதி ஆண்களுக்கு மட்டும்தானா அல்லது பெண்களுக்கும் இது பொருந்துமா? சட்டப்படி இது சரி என்றால், பிறகு ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?

பெண்களுக்கு வழங்கப்படும் நீதியில் சட்டம் இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறையுடனும், இரக்கத்துடனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு பெண்ணின் கண்ணியத்தையும் நேர்மையையும் பாதுகாக்க வேண்டியது சட்டத்தின் கடமை” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டிருக்கிறார்.
