திருமணமான ஆண் பரஸ்பர சம்மதத்துடன் 'லிவ்-இன்' உறவில் இருப்பது குற்றமல்ல: அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு

அலகாபாத்: ‘வயது வந்த பெண்ணுடன், திருமணமான ஆண் ஒருவர் பரஸ்பர சம்மதத்துடன், ‘லிவ் – இன்’ எனப்படும், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் உறவில் இருந்தால், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது’ என, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த நேத்ரபால் – அனாமிகா ஜோடி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ’18 வயதுக்கு மேற்பட்ட நாங்கள் இருவரும், ‘லிவ் – இன்’ உறவில் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம்.

‘அனாமிகாவின் தாய் எங்கள் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதை ரத்து செய்ய வேண்டும். கொலை மிரட்டல் விடுக்கும் அவரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என, கோரியிருந்தனர்.

ஒழுக்கநெறி

இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.ஜே.முனீர் மற்றும் தருண் சக்சேனா ஆகியோர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனாமிகாவின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நேத்ரபால், ஏற்கனவே திருமணமானவர். அவர், வயது வந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்வது சட்டப்படி குற்றம்’ என, வாதிட்டார்.

நேத்ரபால் – அனாமிகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் சேர்ந்து வாழ்வதால், இது சட்டப்படி குற்றமாகாது’ என, தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஒரு மனிதனின் ஒழுக்கநெறிக்கும், சட்டத்திற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட ஆண் எந்தவொரு குற்றத்தையும் இழைத்ததாக தெரியவில்லை. 18 வயது நிரம்பிய பெண்ணுடன் அவர், ‘லிவ் – இன்’ உறவில் வாழ்ந்து வருகிறார். இருவரும் பரஸ்பர சம்மதத்துடனேயே வாழ்கின்றனர்.

நிர்ப்பந்திக்க முடியாது

குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து, சமூக கருத்துகள் மற்றும் ஒழுக்கநெறிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி இந்த நீதிமன்றத்தை நிர்ப்பந்திக்க முடியாது.

இந்த வழக்கில், மனுதாரர்களான தம்பதியை போலீசார் கைது செய்யக்கூடாது.

தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என, அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்கக் கூடாது.

தம்பதி வசிக்கும் இல்லத்திற்குள் குடும்ப உறுப்பினர்கள் நுழையவோ, அவர்களை நேரடியாகவோ, மின்னணு தொடர்பு வாயிலாகவோ, மூன்றாம் நபர் மூலமாகவோ தொடர்புகொள்ள முயற்சிக்கக் கூடாது. மனுதாரர்களின் பாதுகாப்புக்கு ஷாஜஹான்பூர் போலீசாரே பொறுப்பு.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Source link