மத்தியப் பிரதேச மாநிலத்தில் 19 வயது இளம் பெண்ணிற்கும், 40 வயது நபருக்கும் திருமணம் நடைபெற்றது. முன்னதாகவே, இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று அப்பெண் தொடர்ந்து கூறிவந்துள்ளார். இருப்பினும், உறவினர்கள் கட்டாயமாக இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், திருமணத்திற்குப் பின்பு அந்த பெண் காணாமல் போனார். இதையடுத்து, தன் மனைவியை யாரோ கடத்தி சென்றுவிட்டதாகக் காவல்நிலையத்தில் கணவர் புகார் அளித்தார்.
மேலும், மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் நேரில் ஆஜரான அப்பெண் தனது தரப்பு விளக்கத்தை முன் வைத்தார். அதில், “இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்கும் எனது கணவருக்கும் 21வயது வித்தியாசம் உள்ளது. எனவே, நான் எனது விருப்பத்தின்படியே எனது காதலனுடன் சென்றேன். நான் அவருடனே வாழ விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, வயது வந்த ஒரு பெண் தான் யாருடன் வாழ வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய முழு சுதந்திரம் உள்ளது. இதில் பிறர் தலையிட முடியாது” என்று குறிப்பிட்டனர். மேலும், அந்த பெண்ணை தனது காதலுடன் சேர்ந்து வாழ அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். அதோடு, கணவர் அளித்த புகாரையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
