தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளுக்கு நாள் தேர்தல் களம் அனலாக மாறி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணியை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று (13-04-26) செங்கல்பட்டில் பிரச்சார வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “ஊடகங்கள் எல்லாம் நான்கு முனை போட்டி என்கிறார்கள், அதுவே தப்பு. இரண்டு முனைதான், இரண்டு அணி தான். திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் ஒரு அணி. மற்ற இரண்டு பேரும் தனியாக நிற்கிறார்கள். ஒருத்தர் விசில் அடிக்கிறாரு, இன்னொருத்தர் தனியாக ஆவர்த்தனம் செய்கிறார். அவர்கள் போட்டியிலேயே இல்லை, களத்தில் போட்டியிலேயே கிடையாது. இந்த மீடியா ஹைப் கொடுக்கிறார்கள். விஜய் போனார் என்றால் லட்சக்கணக்கில் மக்கள் திரளுகிறார்கள், அவர்தான் அடுத்த முதலமைச்சர் என்ற ஊடகங்கள் திட்டமிட்டு ஊதி பெருக்குகிற வேலையை செய்கின்றன.
திமுக மீது வெறுப்பு உள்ளவர்கள் திட்டமிட்டு பரப்புகிறார்கள். பாஜகவின் பிடிக்குள்ளே போய்விட்ட யூட்யூப் சேனல்ஸ், பாஜகவால் விலைக்கு வாங்கப்பட்ட யூடிபர்ச்ஸ், பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் முடங்கி கிடக்கிற சாட்டிலைட் சேனல்ஸ் இவர்கள் எல்லாம் சர்வேட் எடுக்கிறோம் என்ற பெயரில் விஜய்க்கு பயங்கரமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், ஊதி பெருக்குகிறார்கள். தானாக கூட்டம் வருகிறது, அதனால் அவர் அடுத்த முதலமைச்சர் என ஊதி பெருக்குகிறார்கள். ஓடி ஆடி உழைக்க தேவையில்லை, மக்களுக்கு தொண்டு செய்ய தேவையில்லை, சினிமாவில் ஆட்டம் போட்டால் போதும், அடுத்த முதலமைச்சர் ஆகிவிட முடியும். இப்படி ஒரு கனவு தமிழ்நாட்டில் இருக்கிற ஹீரோ டைரக்டர் எல்லாருக்கும். சினிமாவில் இருந்து வருபவர்களுக்கு எல்லாம் அப்படி ஒரு ஆசை. 35 வருடமாக இந்த மக்கள் களத்தில் நிற்கிற நாம் கூட இதுவரையில் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொன்னதில்லை. நமக்கு பிராக்டிக்கல் என்னவென்று தெரியும். கிரவுண்ட் ரியாலிட்டி என்னவென்று தெரியும். மக்களாக பார்த்து ஏன் திருமாவளவன் இந்த நாட்டின் முதலமைச்சர் ஆகக்கூடாது என்று சொல்லுகிற காலம் வரவேண்டும், அப்படி வரும். ஆனால் பலபேர் கட்சி ஆரம்பித்த உடனே நான்தான் முதலமைச்சர், இங்கே இரண்டே ரெண்டே பேருக்குதான் போட்டி, ஒன்னு டி.எம்.கே இன்னொன்னு டிவிகே.
ஆனால் இரண்டே பேருக்குதான் போட்டி, ஒன்று அதிமுக அணி, இன்னொன்னு திமுக அணி. திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி, கொள்கை சார்ந்த கூட்டணி, பொறுப்புணர்வுள்ள தலைவர்களை கொண்ட கூட்டணி, தொலைநோக்கு பார்வை உள்ளவர்கள் கொண்ட கூட்டணி, அறிவியல் அணுகுமுறை உள்ளவர்கள் கொண்ட கூட்டணி, முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் கொண்ட கூட்டணி. அதிமுக கூட்டணி முற்போக்கு எண்ணங்களை கொண்ட கூட்டணியா? கருத்தியல் சார்ந்த கூட்டணியா? சமூக நீதியை ஏற்று கொள்ள்கிறவர்களா? இஸ்லாமியர்களை வெறுக்கிற வெறுப்பு அரசியலை பேசுகிற கூட்டணி, கிறித்தவர்களுக்கு எதிரான வெறுப்பை அரசியலை பரப்புகிற கூட்டணி, சமத்துவத்தை பேசாத கூட்டணி, சகோதரத்துவத்தை விரும்பாத கூட்டணி. பிஜேபி ஆர்எஸ்எஸ், ஏடிஎம்கே இவர்களுக்கு என்ன முற்போக்கு சிந்தனை இருக்கிறது? இவர்கள் எந்த இடத்தில் சமூக நீதிக்காக போராடி இருக்கிறார்கள், சகோதரத்துவத்திற்காக போராடி இருக்கிறார்கள், சமத்துவத்திற்காக போராடி இருக்கிறார்கள். மிகவும் பிற்போக்குத்தனமான வலதுசாரி கும்பல் இந்த மண்ணில் வலிமை பெற்று விடக்கூடாது. அதனால் அதனால் திமுக கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். அவர்களை வீழ்த்தியாக வேண்டும். அதனால் திமுக கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். ஒன்று திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனைகள் தொடர வேண்டும். இரண்டு வலதுசாரி பிற்போக்கு சக்திகளை வீழ்த்த மீண்டும் திமுக தலைமையிலான அரசு இங்கே அமைய வேண்டும்” எனப் பேசினார்.
