திருமா சத்தமே காணோம்; ஐஜேகே மாநாட்டில் நயினார் கிண்டல்

கடலூர்: ‘தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் விசிக தலைவர் திருமாவளவன் சத்தமே இல்லாமல் இருந்து வருகிறார்,’ என்று இந்திய ஜனநாயகக் கட்சி மாநாட்டில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடந்த இந்தக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது; இவ்வளவு பெரிய மாநாடு நடைபெற்று கொண்டிருக்கிறது என்றால், இந்த ஆட்சியின் மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்பு மக்கள் மத்தியில் இருந்து கொண்டு வருகிறது. பிரதமர் மோடியின் நல்லெண்ணத்தை பெற்றவர் பாரிவேந்தர். பிரதமரின் கரத்தை வலுப்படுத்துவதற்காக, இபிஎஸ் தலைமையிலான கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

கொள்கையில்லா கூட்டம்

இங்கு கூடியிருக்கும் கூட்டம் பாரிவேந்தரின் கொள்கையின் அடிப்படையில் வந்த கூட்டம். கொள்கையில்லாமல் ஒரு கூட்டம் கூடி வருகிறது. ஜனநாயகம் தழைத்து ஓங்க, குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். தன்மானம் காக்க, இலவசங்கள் தவிர்க்கப்பட வேண்டும். டாஸ்மாக் மூடப்பட வேண்டும். இது கொள்கை. இந்த கொள்கை உள்ள தலைவர் தான் இந்த நாட்டில் வாழ முடியும். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் (இபிஎஸ்) இந்த நாட்டை ஆள வேண்டும். இது எப்படிப்பட்ட கொள்கை.

ஆனால், கோட்டையில் இருப்பவர்கள் கொள்கை அடிப்படையில் வாழுகிறார்களா? இல்லை. டாஸ்மாக்கை மூடுவோம் என்று சொன்னார்களே, செய்தார்களா? இல்லை. மதுக்கடைகளை படிப்படியாக குறைப்போம் என்றார்களே, செய்தார்களா? இல்லை.

கரூரில் தான்…

கரூரில் தவெக தலைவரின் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இதற்கு கரூர் முன்னாள் அமைச்சர் (செந்தில் பாலாஜி) தான் காரணம். எந்த சம்பவம் எடுத்தாலும் கரூரிலேயே நடக்கிறது. கரூரில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரியை வீடியோ எடுத்த செய்தியாளர் ஒருவர் அடித்து தாக்கப்பட்டார். இதனை ஊடகங்கள், மீடியாக்கள் வெளியிட்டதா? இல்லை.

இதை எல்லாம் தட்டிக்கேட்பதற்காகத் தான் இந்த மாநாடு நடக்கிறது. கடந்த மாதம் மதுராந்தகத்தில் நடந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பொதுக்கூட்டம் என்று தான் அந்தக் கூட்டத்தை கூட்டினோம். ஆனால், மாநாடு போல நடந்தது. 5 லட்சம் பேர் பங்கேற்றனர்.

சத்தம் இல்லா திருமா!

திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கிறார். வேங்கைவயல் சம்பவம், ஆம்ஸ்டிராங் கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், திருமாவளவன் சத்தமே இல்லாமல் இருக்கிறார். முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை கேவலமாக பேசுகிறார். ஓசி பஸ் என்று சொன்னார். கல்விக்கடன், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று சொன்னார்கள், செய்யவில்லை. சொத்துவரி, மின்கட்டணத்தை அதிகரித்துள்ளனர். பாலியல் குற்றங்களில் திமுகவினர் ஈடுபடுகின்றனர்.

சென்னையில் ரூ.4000 கோடி ரூபாய் திமுக ஆட்சியில் ஊழல் செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து நகராட்சிகளிலும் ஊழல் நடந்துள்ளது. உதயநிதியை அடுத்த முதல்வராக்க ஸ்டாலின் பாடுபடுகிறார்.

தமிழுக்கு பெருமை

தமிழை பற்றி இவர்கள் பேசுகிறார்கள். ஆனால், மலேஷியா சென்ற பிரதமர் மோடி தமிழை பற்றி பேசுகிறார். அங்கு ‘எங்கள் நாட்டில் தமிழகம் என்ற மாநிலம் இருக்கிறது. அந்த மாநில தலைவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை இந்தியாவுக்கு தருகிறார்கள். மிகப்பெரிய கலாசாரம், பண்பாடு. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி தமிழ்,’ என்று பிரதமர் மோடி பேசி நமக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ளார். அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Source link