திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குட்டி யானை நமச்சிவாயம் பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய குட்டி யானை நமச்சிவாயம் இருக்கும் இடத்திற்குச் சென்று, பக்தர்கள் அதனை ஆவலோடு பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

யானை ‘ருக்கு’ மரணம்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ‘ருக்கு’ என்ற பெண் யானை இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யச் செல்வதற்கு முன்பு, இந்த யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். மேலும், கார்த்திகை தீபத்திருவிழா போன்ற விழாக்காலங்களில் அருணாசலேஸ்வரர் வீதியுலா செல்லும்போது, உற்சவ மூர்த்திகளுக்கு முன்பாக யானை ருக்கு கம்பீரமாக மாட வீதிகளில் வலம் வரும்.

உடல் அடக்கம்

கடந்த 2018–ம் ஆண்டு மார்ச் மாதம் 22–ந் தேதி கோவில் வளாகத்தில் யானை ருக்கு திடீரென இறந்தது. பின்னர் கோவில் அருகிலேயே அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு கோவிலுக்கு புதிய யானை கொண்டு வரப்படாமல் இருந்தது.

புதிய ஆண் குட்டி யானை

இந்த நிலையில், கடந்த மாதம் 24–ந் தேதி அசாம் மாநிலத்தில் இருந்து ஒரு புதிய ஆண் குட்டி யானை திருவண்ணாமலைக்கு கொண்டு வரப்பட்டது. ‘ஹீராலால்’ என்ற பெயர் கொண்ட அந்த யானைக்கு, கடந்த வாரம் ‘நமச்சிவாயம்’ என்று புதிய பெயர் சூட்டப்பட்டது.

தொடர் விடுமுறை

தற்போது தொடர் விடுமுறை காரணமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று கோவிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், புதிய குட்டி யானை நமச்சிவாயம் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று ஆவலோடு பார்த்தனர். அப்போது குட்டி யானை நமச்சிவாயமும் தனது தலையை ஆட்டி மகிழ்ச்சியை தெரிவித்தது. இதனை பார்த்த பக்தர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

Source link