திருவண்ணாமலை: ''அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணி ஆகியோர் கண்ணியமற்ற முறையில்

திருவண்ணாமலை: ”அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணி ஆகியோர் கண்ணியமற்ற முறையில் பேசினால், கடும் விளைவுகளை சந்திப்பர்,” என தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரே மலதா எச்சரித்துள்ளார்.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று தரிசனம் செய்த பின், பேட்டியளித்த பிரேமலதா, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, தே.மு.தி.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா ‘சீட்’ ஒதுக்க போடப்பட்ட ஒப்பந்தத்தை காண்பித்தார். பின், அவர் கூறியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வரும் கூட. எனவே, அவரது வார்த்தைகள் கண்ணியமாக இருக்க வேண்டும்; மூன்றாம் தர, நான்காம் தர பேச்சாளர்கள் போல் பேசக்கூடாது.

தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி சேர்ந்தால், பழனிசாமிக்கு ஏன் வயிறு எரிகிறது?

பழனிசாமியுடன் கூட்டணியில் இருந்தபோது, ராஜ்யசபா எம்.பி., சீட் கொடுப்பதாக, 2024ல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை உங்களிடம் காண்பிக்கிறேன்.

எப்போது தருவீர்கள் என குறிப்பிட்டு கேட்டபோது, ‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே அது போன்று கொடுப்பதில்லை; வார்த்தை தான் முக்கியம்’ என்றார்.

தற்போது வார்த்தைக்கு புறம்பாக, ‘நான் எங்கே சொன்னேன்’ என சொல்கிறார். தே.மு.தி.க.,வை ‘அரை பர்சன்ட் ஓட்டு கட்சி, ஐ.சி.யு.,வில் இருந்த கட்சி’ என்கிறார். எங்களுக்கும் கீழ்த்தரமாக பேசத் தெரியும்.

அரசியலில் மரியாதை கொடுக்க நினைக்கிறோம். பழனிசாமி பேசும் அத்தனைக்கும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான மே 4ம் தேதி பதில் கிடைக்கும். வரும் மே 4க்கு பின், அவர் ஐ.சி.யு., போகாமல் இருக்கணும்.

பா.ம.க., தலைவர் அன்புமணியும் தப்பு தப்பாக பிரச்சாரம் செய்வதாக கேள்விப்பட்டேன். ஜாதியை இழுப்பது, குடும்பத்தை இழுப்பது, தவறாக பேசுவது போன்றவற்றை அன்புமணியும், பழனிசாமியும் இத்துடன் நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால், கடும் விமர்சனங்கள் வரும்; கடும் விளைவுகளை சந்தீப்பீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link