திருவண்ணாமலை: ”தி.மு.க., கூட்டணியில், திருமாவளவன் நிலை பரிதாபமாக உள்ளது. கூட்டணியில், அவருக்கு மரியாதை இல்லை,” என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
திருவண்ணாமலையில், அவர் அளித்த பேட்டி: முதல்வர் ஸ்டாலின், லோக்சபா தேர்தல் என நினைத்துக் கொண்டு இருக்கிறார். இது சட்டசபை தேர்தல்; நிகழ்காலத்திற்கு வாருங்கள். தமிழகத்தை கடந்த ஐந்தாண்டுகளாக சீரழித்து, பெண்களை மானபங்கம் செய்து, குழந்தைகளை கொடூரமாக கொன்று, ஊழல் செய்து, விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்து, நெசவாளர்களை வறுமையால் பாதிக்க வைத்து உள்ளனர்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஒரு இடத்தில் கூட மது, போதை பொருட்கள் ஒழிப்பு பற்றி ஏன் பேசவில்லை, இளைஞர்கள் எப்படி நாசமாக போனாலும் பரவாயில்லை என விட்டு விட்டீர்களா. தி.மு.க., ஆட்சியில், 62,000 குழந்தைகள் குற்றங்கள், 44,000 பேருக்கு பெண்களுக்கு எதிரான கொடுமை நடந்துள்ளன. இவை, தெரிந்த 10 சதவீதம் தான், தெரியாதது 90 சதவீதம்.
தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிலை பரிதாபமாக உள்ளது. அவருடைய கட்சிக்குள்ளேயே தி.மு.க., ஆதிக்கத்தால் குழப்பம். தி.மு.க., கூட்டணியில் அவருக்கு மரியாதை இல்லை; அவருக்கு மட்டும் அல்ல, பட்டியலின மக்களுக்கு ஒரு துளி அளவு கூட மரியாதை கிடையாது.
தேர்தலுக்காகவே, விஜய் நடிப்பில் ‘ஜனநாயகன்’ படத்தை எடுத்திருக்கிறார்கள். இப்போது, தேர்தலுக்கு பத்து நாட்களுக்கு முன், எச்.டி., தரத்தில் வெளியிடுகிறார்கள் என்றால், யார் வெளியிட்டார்கள் என, கண்டுபிடிக்க வேண்டும். சி.பி.ஐ., விசாரித்தால், யார் வெளியிட்டார்கள் என தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
