திருவனந்தபுரம்: சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, கேரளாவில் இருந்து சொந்த ஊர் செல்லும் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், சட்டசபை தேர்தல் காரணமாக ஒரு மாதத்திற்கு பின்னரே திரும்புவர் என்பதால், அங்குள்ள உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, நம் நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், பல மாநிலங்களில் சிறிய உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
அதிர்ச்சி
கேரளாவிலும், சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சிறிய உணவகங்கள் மற்றும் சில வணிக நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால், அங்கு பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப துவங்கியுள்ளனர்.
கேரளாவில் பெரும்பாலான உணவகங்களில், அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தற்போது சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
அங்கு, அடுத்த மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதன் பின் இவர்கள் கேரளா திரும்புவர் என கூறப்படுகிறது. இதனால், கேரளாவில் உணவகங்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடவடிக்கை
இதுகுறித்து புலம்பெயர் தொழிலாளர்கள் மையத்தைச் சேர்ந்த பினாய் பீட்டர் கூறுகையில், ‘கேரளாவில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 50 சதவீதம் உள்ளனர். வழக்கமாக தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன் சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள், உணவகங்கள் மூடப்பட்டதால், முன்கூட்டியே புறப்பட்டுள்ளனர்.
”ரம்ஜான் பண்டிகையை கொண்டாடவும் பலர் முன்கூட்டியே கிளம்பியுள்ளனர். அனைவரும் ஒரு மாதத்துக்கு பின்னரே ஊர் திரும்புவர் என்பதால், நிலைமையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.
