திருவனந்தபுரம்: ”நம் நாட்டில் எரிசக்தி ஆற்றலுக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு, நம் கடற்படை போதிய பாதுகாப்பு அளித்து கடக்க உதவி வருகிறது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துஉள்ளார்.
கேரளாவில் நேற்று நடந்த ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்ற நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நம் நாட்டில் தற்போதைக்கு எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை. மத்திய அரசு, மேற்காசிய போர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
முன்னேற்பாடுகள்
எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுஉள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் ஏற்றி வரும் நம் கப்பல்கள், பத்திரமாக அப்பகுதியை கடப்பதற்கு நம் கடற்படையினர் போதிய பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
போர் பதற்றத்திற்கு இடையே வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்களின் நலனை உறுதி செய்யும் வகையில், பிரதமர் மோடி துாதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
தக்க பதிலடி
மேற்காசிய போர் பதற்றத்தை பயன்படுத்தி, தவறான வழியில் நடக்க பாகிஸ்தான் முயற்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பாகிஸ்தான் இதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.
இஸ்ரேல் – ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தான் எடுத்து வரும் மத்தியஸ்த முயற்சிகளை முறியடிக்க இந்திய ராணுவம் பாக்., மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக, அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகின.
இதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே, அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
