திருவனந்தபுரம்: பிரதமர் மற்றும் தேர்தல் கமிஷனை அவதுாறாக சித்தரிக்கும் வகையில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ பரவ காரணமாக இருந்ததாக கூறி, ‘எக்ஸ்’ சமூக வலைதளம் மீது கேரள சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் கட்சி தலைவர்கள் குறித்து தவறான தகவல்கள் பரவுவது அதிகரித்துள்ளது.
சமீபத்தில் தேர்தல் கமிஷன் மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து ஏ.ஐ., மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ராஜு என்பவரால், ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. இது வேகமாக பரவியது.
தேர்தல் கமிஷன் அளித்த புகாரின் அடிப்படையில், கேரள மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் அவதுாறு வீடியோ பதிவிட்ட நபர் மற்றும் ‘எக்ஸ்’ சமூக வலைதளம் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து உள்ளனர்.
இது பற்றி போலீசார் வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் கமிஷன் அளித்த புகாரின் அடிப்படையில், அவதுாறு வீடியோ குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ‘எக்ஸ்’ தளத்திடம் அந்தவீடியோவை முடக்க கோரினோம். ஆனால், அது நீக்கப்படவில்லை.
வீடியோ பரவியதற்காக சம்பந்தப்பட்ட கணக்கு வைத்துள்ள நபர் மற்றும், ‘எக்ஸ்’ நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் தவறான தகவல்களை பகிர வேண்டாம். விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
