திருவாரூர்: ''எதை பற்றியும் புரிதல் இல்லாதவர் இபிஎஸ். எதிலும் தொலைநோக்கு பார்வை இல்லாதவர்,'' என்று

திருவாரூர்: ”எதை பற்றியும் புரிதல் இல்லாதவர் இபிஎஸ். எதிலும் தொலைநோக்கு பார்வை இல்லாதவர்,” என்று திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருவாரூரில் திருவாரூர் மன்னார்குடி தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ மற்றும் திருத்துறைப்பூண்டியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் ஆக விளங்குகிறது.

நான் உங்கள் வீட்டுப்பிள்ளை. நான் இந்த மண்ணின் மைந்தன். திருவாரூர் ஆழித்தேர் 1948 க்கு பிறகு 22 ஆண்டுகள் ஓடவில்லை. திருவாரூரில் வளர்ந்து, திருவாரூரை வளர்த்தெடுத்த கருணாநிதி தேர் செல்லும் பாதையை செப்பனிட்டு ஓடவைத்தார். ஆட்சியில் இருந்தபோது திருவாரூருக்காக நிறைய செய்துள்ளோம். திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கியதே கருணாநிதி தான்

எரிச்சல்

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் டிரெண்ட் செட் ஆக உள்ளது. தமிழகத்தை பார்த்து பல மாநிலங்கள் வழங்க துவங்கினார்கள். ஆனால், தேர்தலை காரணம் காட்டி இந்த திட்டத்தை நிறுத்த பாஜ முயற்சி செய்தது. நாங்கள் விழித்து கொண்டோம். ஏழைகளின் சுருக்கு பையில் இருக்கும் பணத்தை உருவும் திட்டம் போடும் பாஜ அரசின் திட்டத்தை தடுக்க முயற்சி செய்தது.

யார் வயிறு எரிந்தால் என்ன. மக்களின் மனது நிறைய வேண்டும். அது தான் எனது நோக்கம். லட்சியம். இதனால் பிப்ரவரியில் கோடைகால நிதியுடன் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளோம்.

அனைத்து வகையிலும் தமிழகம் முன்னணியில் வந்துள்ளது. இதுதான் அதிமுக தலைமையிலான அடிமை கட்சிகளுக்கு எரிச்சல் ஏற்படுத்துகிறது. இதனால் தமிழகத்தை கலவர பூமியாக திட்டமிட்ட ஏராளமான போலி செய்திகளை பரப்பி பார்த்தனர். கலவர வெறியோடு திரிந்த அவர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியுள்ளது. அவர்கள் பரப்பியது அனைத்தும் அவதூறு என்பதால் எதிர்க்கட்சியினர் அசிங்கப்பட்டு நிற்கின்றனர்.

புலம்பல்

நான் சொன்னதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்வேன். இது தேஜ கூட்டணிக்கு தெரியும். 2014 முதல் சரணாகதி அடைந்து பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. பாஜ கிளைச்செயலாளராக இபிஎஸ் மாறி உள்ளார். அவர் அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார்.

திமுக தேர்தல் அறிக்கையை பார்த்து புலம்பி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை, கனவு இல்லம் திட்டங்களை காப்பியடித்து அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியிடித்த அவர், நாம் காப்பியடித்துவிட்டோம் என புலம்புகிறார்.

அவருக்கு எதை பற்றியும் புரிதல் இல்லை. எதிலும் தொலைநோக்கு பார்வை இல்லை. எப்படி உங்களின் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள் என கேட்டால் வரியை உயர்த்தி நிறைவேற்றுவேன் என இபிஎஸ் சொல்கிறார். இது தான் அவரது திறன். அதை வைத்து பாஜ அவரை மிரட்ட துவங்கி உள்ளது.

புறக்கணிக்க வேண்டும்

தமிழக வளர்ச்சியை தடுக்க வேண்டும். திராவிட மாடல் வளர்ச்சியை அழிக்க வேண்டும். அதுதான் தேஜ கூட்டணி நோக்கம். பாஜ மக்களுக்கு நல்லது செய்யாது. ஆனால், தேர்தல் வந்தால் கண்துடைப்புக்காக ஒரு சில திட்டங்களை அறிவிப்பார்கள். தமிழகத்துக்கு அதைக்கூட செய்யவில்லை.

தேஜ கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். தமிழகத்தை காப்பாற்ற திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேணடும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Source link