ஆழித்தேரில் சுமார் 425 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு இருந்த 4 வடங்களை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஆரூரா.. தியாகேசா…’ சரண கோஷம் விண்ணதிர எழுப்பியவாறு தேரை இழுத்து சென்றனர். முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர், முருகன் தேர்கள் வடம் பிடிக்கப்பட்டது. ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் இழுக்கப்பட்டன.
தேரின் முன்பு சிவனடியார்கள் பஞ்சவாத்தியங்கள், சிவகணங்களை இசைத்த வாறும், தேவார திருமுறைகள் ஓதியவாறும் வீதிஉலா சென்றனர். ஆழித்தேரானது கீழ வீதியில் இருந்து புறப்பட்டு, தெற்கு வீதி, மேல வீதி வழியாக மாலை 6 மணிக்கு வடக்கு வீதியை வந்தடையும்.
ஆழித்தேரோட்டதை முன்னிட்டு சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனம், ஆம்புலன்சு, நடமாடும் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் தயார் நிலையில் இருந்தனர்.
திருவாரூர் நகராட்சி சார்பில் பக்தர்கள் வசதிக்காக தேரோடும் வீதிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டு இருந்தது.
200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தேரோடும் வீதிகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இன்று விடுமுறை நாள் என்பதால் ஆழித்தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டது.
