திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் மன்னர் அரண்மனையில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதியை சுதந்திரத்துக்கு முன் திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தினர் ஆட்சி செய்தனர். இவர்களது அதிகாரப்பூர்வ இல்லமாக இருப்பது திருவனந்தபுரத்தில் உள்ள கவுடியார் அரண்மனை.
இந்த அரண்மனையில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் அஸ்வதி திருநாள் கவுரிபாய் புகார் அளித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: என் படுக்கை அறையில் உள்ள அலமாரியில் இருந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், 12 நகைகள் திருடு போயுள்ளன. இதில், தங்க சங்கிலிகள் மற்றும் கல் பதிக்கப்பட்ட மோதிரங்கள் என, 40 சவரன் நகைகள் கொள்ளை போயுள்ளன. இவற்றின் மதிப்பு, 2 கோடி ரூபாய். திருடு போன நகைகளை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
