பீகார் மாநிலத்தில் நாளந்தா பகுதியில் நிகழ்ந்த கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தில் ஷெரீப் அருகே உள்ள மக்தா சீத்லா கோவிலில் திருவிழா என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. சைத்ரா (Chaitra) மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் இந்த திருவிழாவில் பங்கேற்க பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கூடி இருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பிரார்த்தனையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் படுகாயம் அடைந்தனர். கடும் கூட்ட நெரிசலால் மக்கள் ஒருவரையொருவர் மிதித்துக் கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்தது. முதற்கட்டமாக இந்த சம்பவத்தில் 8 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த 8 பேரும் பெண்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது சம்பவ இடத்திற்கு மாவட்ட அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
